கலகலப்பான படங்கள் அதே நேரத்தில் கருத்தாழம் மிக்க படங்கள் என்றால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ஜெயித்து விடுகின்றன. குறிப்பாக கடந்தாண்டில் லப்பர் பந்து பெரிய வெற்றியை பெற்றது. இப்போது மதகஜ ராஜா படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. 12 நாட்களில் மதகஜ ராஜா 50 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது.
சுந்தர் சி இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் உருவான படம் மதகஜ ராஜா. ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்த இந்த படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு, படம் கிடப்பில் போடப்பட்டது. விஷால் சந்தானம் வரலட்சுமி சரத்குமார் அஞ்சலி சடகோபன் ரமேஷ் நிதின் சத்யா சோனா சூட் சிட்டி பாபு மனோபாலா மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார். கடந்த 2012ம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 12 ஆண்டுகளுக்கு பின் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் நடித்திருந்த மணிவண்ணன் மனோபாலா சிட்டிபாபு போன்றோர் இப்போது இல்லாத நிலையிலும் அவர்களது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தமிழ் சினிமாவில் இப்படி பல படங்கள் எடுக்கப்பட்டு, பல காரணங்களால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கின்றன. இப்படி ரிலீஸாகாமல் முடங்கி கிடக்கும் படங்களால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு 1300 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் கிடப்பில் போட்டுள்ள பல படங்களை மீண்டும் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
அந்த வகையில் நடிகர் விமல் நடித்த படம் படவா. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த படம் இன்னும் திரைக்கு வராமல் முடங்கி கிடக்கிறது. இனி இந்த படம் வெளியானால் பெரிய வரவேற்பை பெறுமா என்ற நிலையில் அப்படியே இந்த படத்தை விட்டுவிட படத்தின் தயாரிப்பு நிறுவனம் அலட்சியமாக இருந்துள்ளது.
ஆனால் இப்போது மதகஜ ராஜா படம் 12 ஆண்டுகளுக்கு பின் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட விமல் நடித்த படவா படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு தயாராகி விட்டது. அதன்படி படவா படம் வருகிற பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சூரி காமெடி ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.





