பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று கங்குவா படம் வெளியானது. பாகுபலிக்கு இணையான ஒரு படமாக இருக்கும், அதுவும் தமிழில் உருவான படம் என்ற பெரிய ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு சென்ற ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது கங்குவா படம் என்பது விமர்சனங்களில் தெரிய வருகிறது.
சமையலுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் மிகவும் முக்கியமானது. இதில் ஏதேனும் ஒன்றிரண்டு இல்லை என்றாலும் அரிசி, பருப்பு, எண்ணெய் மிகவும் அவசியமானது. ஆனால் இவை இல்லாமல், பயன்படுத்தாமல் அறுசுவை உணவு படைத்ததாக கூறுவது எவ்வளவு அபத்தமோ அதுபோல்தான் கதை, திரைக்கதை இல்லாமல் ஒரு படத்தை உருவாக்குவதும்தான்.
கங்குவா படத்தில் சூர்யா உழைப்பை தந்திருக்கிறார். படக்குழுவினர் பல விதங்களில் கடுமையான முயற்சிகளை செய்து படத்தை உருவாக்கி இருக்கின்றனர். ஆனால் கதை, திரைக்கதை இல்லாத ஒரு பிரமாண்ட படத்தை ரசிகர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை சூர்யாவும், டைரக்டர் சிவாவும் யோசிக்க மறந்ததை படம் தெளிவுபடுத்துகிறது.
லப்பர் பந்து படத்தில் நடித்த யாருமே கஷ்டப்படவில்லை. இவ்வளவு மெனக்கெடவில்லை. மிக சாதாரணமான கிரிக்கெட் கதையில் குடும்ப உறவுகளை காட்டி, அழகாக அந்த படத்தை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து ஜெயிக்க வைத்திருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதையும், வசனங்களும், காட்சிகளும்தான்.
அதுதான் ரசிகர்களை மிக எளிதாக கவரும் என்ற அடிப்படை தெரியாமல் படம் முழுக்க இரைச்சலும், கூச்சலும் ஹெவி டிராபிக்கில் 3 மணி நேரம் சிக்கிக்கொண்ட உணர்வில்தான் தியேட்டரை விட்டு ரசிகர்கள் வெளியே வருகின்றனர் என்றால், அந்தளவுக்கு ரசிகர்களை ஒரு விதத்தில் டிக்கெட்டுக்கு பணத்தையும் வாங்கிக்கொண்டு டார்ச்சர் செய்திருக்கின்றனர்.
படம் முழுக்க சத்தம், சத்தம், சத்தம் என்று ஓயாமல் ரசிகர்கள் புலம்பி வரும் நிலையில் படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தியேட்டர் உரிமையாளர்களிடம் படத்தில் சத்தத்தின் அளவை 2 புள்ளிகள் குறைத்து வைக்குமாறு கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படியே படத்தில் தேவையற்ற காட்சிகளையும் 30 நிமிடங்கள் அகற்றி விடுங்கள், 3 மணி நேரம் உட்கார முடியவில்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.





