லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி படம் வருகிற 6ம் தேதி திரைக்கு வருகிறது. அஜீத்குமார் அர்ஜூன் ஆரவ் திரிஷா ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். துணிவு படத்துக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து விடாமுயற்சி திரைக்கு வருகிறது.
கடந்த பொங்கலுக்கே இந்த படம் ரிலீஸாக இருந்த நிலையில், சில சிக்கல்கள் காரணமாக படம் வெளியாகாமல் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது வருகிற 6ம் தேதி படம் ரிலீஸாவது உறுதியாகி விட்டது. சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயிருக்கின்றனர்.
அந்த அளவுக்கு ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு இந்த படத்தின் காட்சிகள் மிரட்டலாக அசத்தலாக இருக்கின்றன. அஜர்பைஜானில் எடுக்கப்பட்ட காட்சிகளில் அஜீத்குமார் காட்டும் வேகமும் துடிப்பும் அவரது ஸ்டைலும் ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்திருக்கின்றன. சண்டை காட்சிகளில் அனல் பறக்க வைத்திருக்கிறார்.
ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் என்ற படத்தின் கதை தான் இது. சுற்றுலா சென்ற இடத்தில் மனைவி திடீரென காணாமல் போய்விடுகிறார். மனைவியை கண்டுபிடிக்க தேடி அலையும் ஹீரோ, வில்லன்களால் பல தொல்லைகளை, பிரச்னைகளை சந்திக்கிறார். அவர் வில்லன்களின் சதியை முறியடித்து தன் காதல் மனைவியை மீட்பதுதான் விடாமுயற்சி படத்தின் கதைச்சுருக்கம்.
இந்த படத்தில் நடித்த வகையில் நடிகர்கள், நடிகைகளின் சம்பளம் விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தில் கதாநாயகன் அஜீத்குமார் வாங்கிய சம்பளம் ரூ. 105 கோடி என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர் அடுத்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க 226 கோடி ரூபாய் கேட்டதாகவும், அவர்கள் தரப்பில் ரூ. 200 கோடி தர சம்மதித்தாகவும் கூறப்படுகிறது.
விடாமுயற்சி படத்தில் நாயகியாக நடித்துள்ள திரிஷாவின் சம்பளம் ரூ. 6 கோடி என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர் இப்போது ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறுகின்றனர். படத்தில் வில்லனாக நடித்துள்ள ஆக்ஷன் கிங் அர்ஜூன் சம்பளம் ரூ. 5 கோடி என்றும், வில்லி கேரக்டரில் நடித்திருக்கும் ரெஜினா கசாண்ட்ராவின் சம்பளம் ரூ. 1 கோடி என்றும் தகவல்கள் கூறுகின்றன.





