நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரவி மோகன் என்கிற ஜெயம் ரவி ஸ்ரீலீலா அதர்வா உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்து ஏஆர் முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தில் ஏற்கனவே பெரும்பாலான காட்சிகளில் அவர் நடித்துவிட்ட நிலையில், இன்னும் 10 நாட்கள் மட்டுமே நடிக்க வேண்டியுள்ளது. சல்மான் நடிப்பில் சிக்கந்தர் என்ற படத்தை ஏஆர் முருகதாஸ் டைரக்ட் செய்து வருகிறார். அந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் சிவகார்த்திகேயன் படத்தின் மீதி காட்சிகளை ஷூட் செய்ய இருக்கிறார்.
இதற்கிடையே பேஷன் ஸ்டுடியோ சார்பில் சுதன் தயாரிப்பில் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 24 படம் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படம், ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் படம் என அந்த 2 படங்களையும் முடித்துவிட்டு அடுத்ததாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயனும் ஏற்கனவே ஓகே சொல்லி இருந்தார்.
இதற்காக பல மாதங்களாக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி காத்திருந்தார். இதனால் பலத்த ஏமாற்றம், அப்செட்டில் அவர் இருந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், தெலுங்கு பட ஹீரோக்கள் சிலரை சந்தித்து சிபி சக்ரவர்த்தி கதை கூறியிருக்கிறார். இதில் நடிகர் நானிக்கு சிபி சக்ரவர்த்தி சொன்ன கதை மிகவும் பிடித்துப் போய் இருக்கிறது. உடனே அவரை படம் பண்ண அழைத்திருக்கிறார்.
இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்த எஸ்கே 24 படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி வெளியேறிவிட்டார். இந்த சூழலில், எஸ்கே 24 படத்தை குட்நைட் படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரிடம் பேசியிருந்த சிவகார்த்திகேயன், கதை ரெடி ஆனவுடன் சொல்லுங்கள், உங்கள் படத்தில் நடிக்க தேதி தருகிறேன் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து பேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 24 படத்தை விநாயக் சந்திரசேகர் இயக்க உள்ளது உறுதியாகி விட்டது. அதே நேரத்தில் சிபி சக்ரவர்த்திக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இதனால் எந்த மனக்கசப்பும் வருத்தமும் இல்லை. சுமூகமாக நட்பு நீடிக்கிறது. நடிகர் நானி நடிக்கும் படத்தை இயக்கி முடித்து விட்டு வரும்போது, மீண்டும் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.





