கடந்த 2024ம் ஆண்டில் நடிகர் அஜீத்குமார் விடாமுயற்சி குட்பேட் அக்லி என்ற 2 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில் விடாமுயற்சி படம் கடந்த 6ம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட்பேட் அக்லி வருகிற ஏப்ரல் 10 அல்லது மே 1ம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.
இப்போது நடிகர் அஜீத்குமார் போர்ச்சுக்கல் நாட்டில் கார் ரேஸில் கலந்துக்கொண்டு இருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் முதல் வருகிற அக்டோபர் மாதம் வரை 10 மாதங்களுக்கு 10 நாடுகளில் தொடர்ந்து நடக்கும் கார் ரேஸில் அணித் தலைவராக, போட்டியாளராக அஜீத்குமார் பங்கேற்று வருகிறார்.
அஜீத்குமார் கார் ரேஸிங் என பெயரிடப்பட்ட இவரது அணியில் மற்ற வீரர்களும் உள்ளனர். அந்த அணிக்கு தலைவராக அஜீத்குமார் உள்ளார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார் ரேஸில் அஜீத்குமார் அணிக்கு 3ம் இடம் கிடைத்தது. கார் ரேஸ் பயிற்சியின் போது அஜீத்குமார் 2 முறை விபத்தில் சிக்கிய நிலையிலும், அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் இன்றி போட்டியில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அஜீத்குமார் அடுத்து நடிக்கப் போகும் அவரது 64வது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆளாளுக்கு ஒரு இயக்குனர் பெயரை சொல்லிக் கொண்டு இருந்தாலும் குறிப்பிட்ட 6 இயக்குனர்களின் பெயர்கள் இந்த லிஸ்ட்டில் முன்னிலையில் இருக்கின்றன.
இயக்குனர்கள் சிறுத்தை சிவா வெங்கட்பிரபு விஷ்ணுவர்தன் ஆகியோர் ஏற்கனவே அஜீத் நடித்த படங்களை இயக்கியவர்கள். விவேகம் விஸ்வாசம் வீரம் வேதாளம் படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. அஜீத்குமாரின் 50வது படம் மங்காத்தாவை இயக்கியவர் வெங்கட்பிரபு, பில்லா அசல் படங்களை இயக்கியர் விஷ்ணுவர்தன். அந்த அடிப்படையில் இவர்களுக்கு மீண்டும் ஏகே வாய்ப்பு தரலாம் என்று கூறப்படுகிறது.
இப்போது அந்த லிஸ்ட்டில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பெயரும் இணைந்துள்ளது. அதே போல் மகாராஜா படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநான் பெயரும் லிஸ்ட்டில் இணைந்துள்ளது. சமீபத்தில் அஜீத்குமாரை அவர் சந்தித்ததாகவும், ஒன்லைன் கதை கேட்ட ஏகே ஓகே சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் போர்த்தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜாவுக்கு தனது 64வது படத்தை இயக்க அஜீத்குமார் வாய்ப்பளிக்கலாம் என்ற தகவலும் உறுதியாகி உள்ளது. அதனால் 6 இயக்குனர்களில் ஏகேவின் அடுத்த இயக்குனர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.





