நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், மக்கள் பணி செய்ய அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய அவர், சமீபத்தில் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்.
இந்த மாநாட்டில் 48 நிமிடங்கள் ஆவேச உரை நிகழ்த்திய விஜய், தனது அரசியல் கொள்கைகள், கோட்பாடுகளை விளக்கிப் பேசினார். மேலும் தனது அரசியல் எதிரி திமுகதான் என்றும் பகிரங்கப்படுத்தி பேசினார். குடும்ப அரசியல் நடத்தி வரும் ஆளுங்கட்சியை தோற்கடித்து வருகிற சட்டசபை தேர்தலில் ஜெயித்து மக்களுக்கு நல்லாட்சி வழங்குவேன் என்று சூளுரைத்தார்.
விஜய் அரசியல் மாநாடு நடத்தும் வரை தம்பி விஜய், மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்திருக்கிறார், தம்பி விஜயை வரவேற்று வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என்று பேசிக்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநாட்டுக்கு பிறகு தம்பி விஜயை தாறுமாறாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்.
ரோட்டுல அந்த பக்கமா நில்லு, இல்லே இந்த பக்கமா நில்லு, ரோட்டுல நடுவுல நின்னா லாரி மோதிடும். நான் பஞ்ச் டயலாக் பேச வரலே, நெஞ்சு டயலாக் பேசறேன், நான் வரலாறை பேச வரலே தம்பி, வரலாறை கற்பிக்க வந்தவன், நீங்க வெச்ச வேலு நாச்சியார் கட் அவுட் நான் வரைஞ்சது தம்பி என்றெல்லாம் விஜயை தாறுமாறாக விமர்சித்தார். வாட் ப்ரோ, திஸ் ஈஸ் ராங்க் ப்ரோ என்றும் ஒரு மேடையில் விஜயை கலாய்த்தார்.
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்துக்கு வரவழைத்து தவெக சார்பில் நிவாரண பொருட்களை விஜய் வழங்கினார். இதுகுறித்து பலவிதமான எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. ஒர்க் பிரம் ஹோம் போல, விஜய் பனையூர் கட்சி அலுவலகத்துக்குள் இருந்துக்கொண்டே அரசியல் நடத்துகிறார் என கிண்டல் செய்தனர்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், விஜய் களத்தில் நிற்க முடியாது. அதில் நிறைய பிரச்சனை இருக்கிறது. மக்களை சந்திக்க அவர் களத்திற்கு போனால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டத்தை விட அவரை பார்க்க வேண்டும் என்ற கூட்டம் அதிகமாக வந்துவிடும். அந்த பிரச்னையை வேறு சமாளிக்க வேண்டும். விஜய்க்கு நேரில் அழைத்தாவது உதவ வேண்டும் என்று எண்ணம் இருக்கிறதே, அதை பாராட்ட வேண்டும் என்று சீமான் கூறியிருக்கிறார். சீமான் திடீரென விஜய்க்கு ஆதரவாக பேசியிருப்பதை தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் ஒய் ப்ரோ என கலாய்த்து வருகின்றனர்.





