இயக்குனர் அமீர் இயக்கிய பிதாமகன் படத்தில் சில காட்சிகளில் நடித்து அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. பிறகு பருத்திவீரன் ராம் சுப்ரமணியபுரம் நாடோடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து காமெடி நடிகராக பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றார். தொடர்ந்து தாமிரபரணி அறை எண் 305ல் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து பெரிய நஷ்டத்தை சந்தித்தவர் கஞ்சா கருப்பு. சொந்த ஊரில் அமீர் பாலா என்ற பெயரில் சொந்தமாக கட்டிய வீட்டை விற்று கடன்களை அடைத்தார். விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒருமுறை பங்கேற்றார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது சென்னை மதுரவாயலில் வாடகை வீட்டில் வசித்து வரும் நடிகர் கஞ்சா கருப்பு சில வாரங்களுக்கு முன் தன் வீட்டில் இருந்த கலைமாமணி விருது பணம் ரூ. 1.5 லட்சத்தை காணவில்லை. பூட்டியிருந்த தன் வீட்டு பூட்டை உடைத்து, வீட்டு உரிமையாளர் வீட்டுக்கு பெயிண்ட் அடித்த நிலையில் அவை காணாமல் போனதாக மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.
பல மாதங்களாக வாடகை பாக்கி தராமல், தனது வீட்டை கஞ்சா கருப்பு உள்வாடகைக்கு விட்டதாகவும், தனது வீட்டை லாட்ஜ் போல கஞ்சா கருப்பு மாற்றிவிட்டதாகவும் கஞ்சா கருப்பு மீது அந்த வீட்டின் உரிமையாளர் புகார் அளிக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த சூழலில் நேற்று போரூரில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையில், டாக்டர் இல்லை என கஞ்சா கருப்பு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக அமைச்சர் மா சுப்ரமணியம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, நடிகர் கஞ்சா கருப்பு அவரது மகனுக்கு சிகிச்சை பெற சின்ன போரூரில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அப்போது டாக்டர்கள் உள்ளே இருந்துள்ளனர்.
ஆனால் டாக்டர்கள் பணியில் இல்லை என்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். சினிமா வசனம் போல டாக்டர்கள் குறித்து பேசிவிட்டு வந்திருக்கிறார். கஞ்சா கருப்பு சொன்ன நேரத்தில் டாக்டர்கள் பணியில் இருந்த தகவலை மேயர் சமூக வலைதளங்களில் தெரிவித்தும் உள்ளார். மீண்டும் இந்த விவகாரத்தை கிளறினால் பிரச்னை செய்தால் கஞ்சா கருப்புக்குதான் பாதிப்பு ஏற்படும் என, அமைச்சர் மா சுப்ரமணியன் எச்சரித்துள்ளார்.





