இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்த வீரம் விவேகம் விஸ்வாசம் வேதாளம் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிசெய்தவர் வெற்றி. இவர் திருப்பூரை சேர்ந்தவர். ஏர்முனை என்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். திருப்பூர் கோவையில் விவசாயம் சார்ந்த பல போராட்டங்களிலும் அடிக்கடி ஈடுபட்டு வருகிறார்.
சிறுத்தை சிவா இயக்கும் படங்களின் ஒளிப்பதிவாளராக தொடர்ந்து பணிசெய்து வருகிறார். கங்குவா படத்தை கடுமையாக விமர்சித்த பலரும் ஒளிப்பதிவை வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு நவீன தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் அளவுக்கு சிறப்பாக உலக தரத்தில் ஒளிப்பதிவை செய்யும் கலைஞராக வெற்றி தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தை சிறுத்தை சிவா டைரக்ட் செய்தார். ஒளிப்பதிவாளராக அந்த படத்திலும் வெற்றி பணிபுரிந்தார். அப்போது படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் உடன் பணிசெய்த அனுபவங்கள் குறித்து ஒரு நேர்காணலில் பங்கேற்ற ஒளிப்பதிவாளர் வெற்றி பேசியிருக்கிறார்.
அண்ணாத்த படம் குறித்து இயக்குனர் வெற்றி கூறியதாவது, படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு ஷாட் இல்லாத நேரத்தில் ரஜினிகாந்த் ஒரு இடத்தில் அமர்ந்து புக் படித்துக்கொண்டு இருப்பார். தியானம் செய்துக்கொண்டு இருப்பார். அவ்வப்போது என்னையும் இயக்குனரையும் என்ன செய்கிறார்கள் என்றும் கவனித்து பார்த்துக்கொண்டு இருப்பார்.
ஷாட் என்று சொன்னவுடன் உடனே கேமரா முன்பு வந்து நின்று விடுவார். ஒரு மணி நேரம் ஷாட் இல்லை. ரஜினி அந்த ஒரு மணி நேரம் கேரவனுக்குள் சென்று ஓய்வு எடுக்கட்டும் என்று அவரது உதவி இயக்குனரிடம் சொல்லி அனுப்புவேன். அவர் உடனே ரஜினியிடம் சென்று சொல்வார். ஆனாலும் ரஜினி என்னிடமோ, இயக்குனரிடமோ ஒரு மணி நேரம் ஷாட் இல்லையா, நான் கேரவனுக்கு போகலாமா என்று கேட்டுவிட்டு பிறகுதான் கேரவனுக்கு செல்வார்.
உதவி இயக்குனர் சொன்னாலும், என்னிடம் அதை மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தாமல் அவர் செல்ல மாட்டார். நான் பிறப்பதற்கு முன்பே அவர்தான் சூப்பர் ஸ்டார். இப்போதும் அவர்தான் சூப்பர் ஸ்டார். ஆனால் இப்பவும் அந்த தொழில் மேல் அவருக்கு இருக்கிற சின்சியாரிட்டி அதுதான். அந்த பணிவும் அவரிடம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்று ஒளிப்பதிவாளர் வெற்றி கூறியிருக்கிறார்.





