தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் மூத்த நடிகை ஆகவும் விளங்குபவர் நயன்தாரா. ஐயா திரைப்படத்தில் ஆரம்பமான அவரது பயணம் தற்போது வரை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது. நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நயன்தாரா அந்த திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வரும் நயன்தாராவுக்கு தற்போது அடுத்தடுத்த திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. ஆனால் கடந்த காலங்களில் அவருக்கு, எந்த ஒரு திரைப்படமும் வெற்றிகரமாக அமையவில்லை.
ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அவர் கால் பதித்தாலும், அது அவருக்கு சிறந்த தொடக்கமாக அமையவில்லை. இந்த நிலையில் தற்போது மண்ணாங்கட்டி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. அதேபோல் டெஸ்ட் மூக்குத்தி அம்மன் பார்ட் 2 ஆகிய திரைப்படங்களும் அவரது வரிசையில் உள்ளன.
மூத்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அறியப்படுகிறார். ஹீரோக்களுக்கு நிகராக அவருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் திரையரங்குகளில் ஒளிபரப்பப்படுகிறது. தற்போது ராக்காயி என்னும் திரைப்படத்தில் அவர் நடித்து வரும் நிலையில் அதற்கான அறிவிப்பு வீடியோவிலும் இந்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் இருந்தது.
ஆனால் தனக்கு அந்த பட்டம் வேண்டாம் என்று நயன்தாரா தொடர்ந்து கூறி வருவதாகவும், ஆனால் தயாரிப்பாளர்கள் தான் இதனை கேட்டுக் கொள்வதில்லை என்றும் ஒரு பேச்சு கோலிவுட்டில் தொடர்ந்து இருந்து வந்தது. இந்த சூழலில் தான் தனக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிக்கையின் வாயிலாக கூறியிருக்கிறார் நயன்தாரா.
அதில், இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இனிமேல் என்னை நயன்தாரா என்று மட்டுமே அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் என் பெயர் எனக்கு மிக நெருக்கமான ஒன்று. பட்டங்களும் விருதுகளும் மதிப்பு மிக்கவை தான். ஆனால் அவை நம் வேலையில் இருந்து பிரிக்கக்கூடும். சினிமா தான் நம்மை ஒன்றாக இணைக்கிறது. அதைத்தொடர்ந்து கொண்டாடிக் கொண்டே போகலாம் என்று தெரிவித்துள்ளார்.





