இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரசிகர்கள் மாநகரம் படம் வந்த போதே, யார் இந்த டைரக்டர் என ரசிகர்களை நிமிர்ந்து பார்க்க வைத்தவர்தான் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கைதி படம், கார்த்திக்கு பெரிய கம்பேக் ஆக இருந்தது. படம் முழுக்கவே இரவில் எடுக்கப்பட்ட இருந்தது. படத்தில் கதாநாயகியோ, பாடல்களோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தில் பெரிதாக காமெடி காட்சிகளும் இல்லை. ஆனால் கைதி மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படமாக அமைந்தது.
தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். பெரிய அளவில் இந்த படம் பேசப்படாவிட்டாலும், கடுமையான விமர்சனங்கள் படத்துக்கு எழவில்லை. எனினும் வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிப்பு பேசப்பட்ட படமாக அமைந்தது. சிறார் குற்றவாளிகளை மையப்படுத்திய படமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து விக்ரம் படம், கமல்ஹாசனின் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இந்தியன் படத்துக்கு பிறகு, கமல்ஹாசனுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்த ஒரு படமாக இது இருந்தது. இடைவேளை வரை கமல் நடித்த காட்சிகள் மிக குறைவுதான் என்றாலும், இது கமல்ஹாசனின் படமாகவே இருந்தது. அதேவேளையில், லோகேஷின் இயக்குதலும் அதே தரத்தில் இருந்து, படத்தை வேற லெவலில் காட்டியது.
பீஸ்ட், வாரிசுக்கு பிறகு இந்த படம் லியோ தான் விஜய்க்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் கத்தி, துப்பாக்கி, ரத்தம், வெடிகுண்டு, வெடிச்சத்தம், தீவிரவாதம், வன்முறை காட்சிகள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சில விஷயங்களையே திரும்ப திரும்ப காட்டுகிறாரே என்ற கேள்வியும் இயக்குநரிடம் எழுகிறது.
இதுகுறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பதாவது, நான் சில்வர்ஸ்டோன், அர்னால்டு படங்களை பார்த்து வளர்ந்தவன். அதனால், நான் ஆக்சன் படங்களை விரும்பி இயக்குகிறேன். மற்றவர் பார்வையில் அது வயலன்ட் ஆக தெரிந்தாலும், என்னை பொருத்தவரை அது ஆக்சன் படம்தான். அவர்கள் துப்பாக்கி பிடிக்கிற விதமும், சுடுகிற காட்சிகளும் சிறந்த சண்டை காட்சிகளாக தான் எனக்கு தெரிகின்றன.
அதுமட்டுமின்றி, எனது கடந்த கால படங்களை பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பு ரசிகர்களுமே பார்த்திருக்கின்றனர். அதனால், என் படம் இப்படித்தான் இருக்கும் என அவர்களுக்குத் தெரியும். தியேட்டருக்கு வரும் முன்பே, டிரெய்லரின் என் படத்தின் சில காட்சிகளை பார்த்துவிட்டு வருவதால், ஆக்சன் படம் பார்க்கும் மனநிலையில்தான் வருவார்கள். குடும்ப படம் பார்க்கும் மனநிலையில் வரமாட்டார்கள். அதனால், தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் ஏமாந்துபோக வாய்ப்பே இல்லை, என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.





