ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர்” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இத்திரைப்படத்திற்கான முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்காவில் மட்டுமே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

பொதுவாகவே ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு கூட்டம் அலைமோதும். இந்தியா மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் ரஜினிகாந்திற்கு அதிக ரசிகர்கள் உண்டு. இவ்வாறு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் புகழ் பெற்ற நடிகராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த்.
அவரது திரைப்படங்கள் வெளிவந்தாலே திரையரங்குகள் திருவிழா போல் காணப்படும் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் கோலோச்சி வரும் ரஜினிகாந்த், தற்போதைய தலைமுறை நடிகர்களுக்கும் டஃப் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது வலைப்பேச்சு வீடியோவில் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், “ஜெயிலர்” படத்தை குறித்த ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் ரஜினிகாந்திற்கு ஒரு மனு அனுப்பியிருக்கிறார்களாம். ஜெயிலர் படத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்களாம்.
இந்த தகவலை பகிர்ந்துகொண்ட அந்தணன், “நியாயமாக இப்படி ஆசைப்படவே கூடாது. ஜெயிலர் வெளியாகும் நாளில் வேறு நடிகர்களின் திரைப்படங்களும் வருகிறது. அவர்கள் மட்டும் என்ன தக்காளி தொக்கா? அவர்களும் பணம் போட்டுத்தானே படம் எடுக்கிறார்கள்.
எனினும் இந்த மனுவை சன் பிக்சர்ஸிற்குத்தான் அனுப்ப வேண்டும். ஆனால் ரஜினிகாந்திற்கு அனுப்புகிறார்கள். இது போன்ற காமெடிகள் நடந்துகொண்டிருக்கிறது” என்று கிண்டலாக பேசியுள்ளார்.





