இந்திய திரைத்துறையில் உச்ச விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது தேசிய விருது. நேற்று 69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2021ஆம் ஆண்டுக்கு முன்னர்வரை தணிக்கை பெற்ற படங்கள் ரேஸில் கலந்துகொண்டன. மொத்தம் 283 படங்கள் பரிந்துரை பட்டியலில் ஜூரிக்கள் தெரிவிக்கவும் செய்தனர்.
தமிழில் இருந்து ஜெய் பீம், மாநாடு, விநோதய சித்தம், கடைசி விவசாயி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றிருந்தன. கண்டிப்பாக ஜெய் பீம் படம் சிறந்த படத்துக்கான தேசிய விருது பெறும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி நம்பி விளைவு படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது கொடுக்கப்பட்டது. அது பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் சிலரின் மத்தியில் விமர்சனத்தை எழுப்பியது.
குறிப்பாக சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதால் அதனை மனதில் வைத்துதான் ராக்கெட்ரி படத்துக்கு விருது கொடுத்ததாக கூறினர். அதேபோல் ஜெய் பீம் படத்துக்கு நிச்சயம் தேசிய விருதை கொடுத்திருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாக்களை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது என்பது இதன் மூலம் புரிகிறது. அதுமட்டுமின்றி இந்து, முஸ்லீம் இடையே கலவரத்தை தோற்றுவிக்கும்படி உருவான காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது கொடுத்ததிலிருந்தே இதில் எவ்வளவு அரசியல் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம் எனவும் பலர் பேச ஆரம்பித்தனர்.
இது ஒருபக்கம் இருக்க ஜெய் பீம் படம் எளிய மக்களில் அதுவும் இருளர் இன மக்களின் வலியையும், வாழ்வியலையும் முதன்முறையாக இந்திய திரையுலக வரலாற்றிலேயே பேசியிருந்தது. அப்படிப்பட்ட படத்தைதானே மத்திய அரசு ஊக்குவித்திருக்க வேண்டும் என பெரும்பாலான ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். ஆனால் எதற்காக ஜெய் பீம் படம் ஒதுக்கப்பட்டது என்பதற்கு ஜூரி குழுவிடமும், மத்திய அரசிடமும்தான் பதில் இருக்கிறது.
We in the film ferernity are united in our happiness for this year's #NationalAwards
Did they leave out " jaibeem"due to any particular reason or is it the voice if INDIA which has them given jitters .— pcsreeramISC (@pcsreeram) August 25, 2023
இந்நிலையில் இந்திய அளவில் பிரபல ஒளிப்பதிவாளராக இருக்கும் பி.சி.ஸ்ரீராம் ஜெய் பீம் படத்துக்கு தேசிய விருது கொடுக்காதது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெய் பீம் படத்துக்கு தேசிய விருது கொடுக்காமல் இருந்ததற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் இருக்கிறதா அல்லது இந்தியாவின் குரல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?” என காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.





