நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தை தொடர்ந்து இப்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடந்து வருகிறது. இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். வில்லன் கேரக்டரில் ரவி மோகனும், முக்கிய கேரக்டரில் நடிகர் அதர்வாவும் நடித்து வருகின்றனர்.
கடந்த 1960களில் நடக்கும் கதைக்களம் என்பதால், அன்றைய காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வரும் லைவ் லொகேஷன்கள் அதிகம் நிறைந்த இலங்கையில் பராசக்தி படக்குழு முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இன்னும் ஒரு மாதம் அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. லைவ் லொக்கேஷன் என்பதால் செட் அமைத்தல் போன்ற அநாவசிய செலவுகள் இந்த படத்தில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடிகர் சூர்யா நடிக்க கமிட் ஆன படம் புறநானூறு. சுதா கொங்கரா இயக்கத்தில் மொழிப்போர் தியாகி இராசேந்திரன் என்பவரது வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க சூர்யா மறுத்து விட்டதால், அந்த கதையில்தான் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் படம் போலவே இதுவும் ஒரு பயோபிக் கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது நடித்து வரும் பராசக்தி படத்தை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கனவே நடித்த மதராஸி படத்தில் விடுபட்ட சில காட்சிகளில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அடுத்து மற்றொரு புதிய படத்தில் குட்நைட் பட இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார்.
இலங்கையில் தற்போது நடந்து வரும் பராசக்தி படப்பிடிப்பில் புதிதாக ஒரு மலையாள நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் மலையாளத்தில் பிரபல இயக்குனராக நடிகராக இருக்கும் பசில் ஜோசப் என்று தெரிய வந்துள்ளது. இவர் நடிகர் சூர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்க கமிட் ஆகியிருப்பதும், அந்த படத்தை மம்முட்டி தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிப்பதும் குறிப்பிடத்தக்கது.
மலையாள இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு வருகை தருவது நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்களை தருவதற்கு வாய்ப்பாகிறது. சூர்யா படத்தை இயக்குவது மட்டுமின்றி நல்ல நடிகரான பசில் ஜோசப் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம்தான். நிச்சயமாக பராசக்தி படத்தில் அவரது நடிப்பு பேசும்படியாக தரமானதாக இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே பேசத் துவங்கி விட்டனர்.





