தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். பாடகர் தயாரிப்பாளராக இருந்த அவர் இப்போது இயக்குனராகவும் மாறி விட்டார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் ராயன். இது அவரது 50வது படம் என்ற நிலையில் அவரே நடித்து டைரக்ட் செய்திருந்தார். ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்த சூப்பர் ஹிட் படமாக அது அமைந்தது.
ஆனால் சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக தனுஷ் இயக்கி நடித்த இட்லிகடை படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது.
தனுஷ் நடித்து இயக்கிய இட்லி கடை படம் ரிலீஸாகும் அதே நாளில் நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆக உள்ளதால் ஒருவேளை இட்லி கடை ரிலீஸ் தள்ளி போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் தமிழ்நாட்டில் மட்டுமே குட் பேட் அக்லி படத்தை 1000 தியேட்டர்களில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் இட்லி கடை படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையே நடிகர் தனுஷ் இப்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். டெல்லியில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த படத்துக்கு பிறகு போர்த்தொழில் படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். சரத்குமார் அசோக் செல்வன் நடித்த போர்த் தொழில் படம் மாஸ் ஹிட் திரில்லர் படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இந்த புதிய படத்தில் பிரேமலு பட நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 23 வயதான மமிதா பைஜூ பிரேமலு படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து விட்டார். இப்போது விஜயுடன் ஜனநாயகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
மேலும் டிராகன் பட நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க மமிதா பைஜூ ஏற்கனவே கமிட் ஆன நிலையில், இப்போது நடிகர் தனுஷூக்கு ஜோடியாக இந்த படத்திலும் நடிப்பது உறுதியாகி விட்டது. இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் சில காட்சிகளில் நடித்து விட்டு பிறகு விலகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





