தமிழில் மிக நல்ல படங்களை தந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். அவரது இயக்கத்தில் வெளியான கஜினி ஏழாம் அறிவு கத்தி துப்பாக்கி சர்கார் ரமணா போன்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டவை. அந்த படங்களில் நடித்த ஹீரோக்களுக்கும் பெரிய அடையாளமாக அந்த படங்கள் இருந்தன.
தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் அவ்வப்போது ஏஆர் முருகதாஸ் படங்களை இயக்கி வருகிறார். தமிழில் சூர்யா நடித்த கஜினி படத்தை இந்தியில் நடிகர் அமீர்கான் நடிப்பில் இயக்கி பெரிய வரவேற்பை இந்தியிலும் பெற்றார். இப்போது சல்மான்கான் நடித்த சிக்கந்தர் என்ற படத்தை ஏஆர் முருகதாஸ் டைரக்ட் செய்திருக்கிறார்.
தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கிய நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் 7 ஆண்டுகள் வரை படங்கள் இயக்க வாய்ப்பின்றி இருந்த இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி படத்தை இயக்கினார்.
அப்போது திடீரென இந்தி நடிகர் சல்மான்கானிடம் இருந்து அழைப்பு வந்தால், மதராஸி படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சிக்கந்தர் இந்தி படத்தை இயக்கச் சென்றுவிட்டார். சிவகார்த்திகேயனும் அமரன் படப்பிடிப்பில் கவனம் செலுத்தினார். சிக்கந்தர் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் நிறைவடைந்த நிலையில் வருகிற 30ம் தேதி இந்த படம் ரிலீஸாகிறது.
சிக்கந்தர் படத்தில் சல்மான்கானை விட 31 வயதுகள் குறைந்த நடிகை ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழ் மலையாளம் இந்தி தெலுங்கு என எல்லா மொழி சினிமாக்களிலுமே ஸ்டார் ஹீரோக்கள் 60 70 வயது கடந்தவர்களாக இருப்பதால், சிறிய வயது நாயகிகள் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் போது இந்த விமர்சனம் எழுந்து விடுகிறது.
இதுகுறித்து சிக்கந்தர் படம் பிரமோ நிகழ்ச்சியில் இந்தி நடிகர் சல்மான்கான் பேசியதாவது, ஹீரோயினுக்கும் எனக்கும் 31 வயது வித்யாசம் என்று விமர்சனம் செய்கின்றனர். இந்த வயது வித்யாசத்தில் ஹீரோயினுக்கும் பிரச்னை இல்லை. அவர் அப்பாவுக்கும் பிரச்னை இல்லை. அப்படி இருக்கும்போது உங்களுக்கு என்ன பிரச்னை. ராஷ்மிகாவுக்கு திருமணமாகி மகள் பிறந்தால் ராஷ்மிகாவின் அனுமதியுடன் அவருடனும் சேர்ந்து நடிப்பேன் என்று தடாலடியாக நடிகர் சல்மான்கான் பேசியிருக்கிறார். அது இப்போது வைரலாகி வருகிறது.





