வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை பாஜக மற்றும் அதிமுக கூட்டணி சேர்ந்து சந்திக்கின்றன. நேற்று தமிழகம் வந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக அமித்ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜக தலைவர்கள் அண்ணாமலை தமிழிசை சௌந்தர்ராஜன் அதிமுக சார்ந்த எஸ்பி வேலுமணி முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் பாஜக அதிமுக கூட்டணி குறித்து நடிகர் விஜய் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, மக்கள் விரோத மறைமுக கூட்டு கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்பந்த கூட்டு கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி விரட்டி அடித்து தூக்கி எறிய போவது உறுதி.
குறைந்தபட்ச அரசியல் அறத்தைக் கூட தொலைத்த ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பாஜகவும் மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தின் ஊற்றுக்கண் திமுகவும் வெளியில் தான் கொள்கை பகையாளிகள். ஆனால் நாம் ஏற்கனவே சொன்னது போல உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே.
ஊழல் நடைபெற்ற மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன, ஊழல் மலிந்த தமிழ்நாட்டில் நடப்பது என்ன, மற்ற மாநிலங்களில் ஊழல் செய்தவர் முதலமைச்சரே ஆனாலும் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இந்த நாடு அறியும்.
ஆனால் இங்கு ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும் போது உடனடியாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டால், அவர் மீதான நடவடிக்கையில் சுணக்கத்தை ஏற்படுத்தி நடவடிக்கைக் உட்படுத்தியவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போன்று செயல்படுவதையும் இந்த நாடறியும். இது போன்ற பல செயல்பாடுகள் பாஜக திமுக மறைமுக கூட்டு என்பதை வெட்டவெளிச்சமாக்கி உள்ளன.
திமுகவை மறைமுக கூட்டணியாக ஏற்கனவே தயார் செய்துவிட்ட நிலையில், தங்களது பழைய பங்காளியான அதிமுகவை பகிரங்க கூட்டாளியாக பாஜக மீண்டும் கை பிடித்துள்ளது ஒன்றும் ஆகப்பெரிய ஆச்சரியம் இல்லை. ஏற்கனவே மூன்று முறை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்த கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளது என்பது நான் சொல்லித்தான் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை என்று நடிகர் விஜய் கூறியிருக்கிறார்.





