நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் ஒரு அற்புத கலைஞனாக தன்னை பிரதிபலித்து கலைத்துறைக்கே பெருமை சேர்த்தவர் என்றால் அது மிகையல்ல. களத்தூர் கண்ணம்மா படத்தில் 5வயது சிறுவனாக அவர் அறிமுகமானார். ஆனந்தஜோதி உள்ளிட்ட எம்ஜிஆர், சிவாஜி கணேசன், எம்ஜிஆர் என ஜாம்பவான் நடிகர்களுடன் சிறுவயதிலேயே நடிக்கும் அற்புத வாய்ப்பை பெற்ற குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசன்.
அதற்கு பிறகு இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் உருவாக்கிய ஒரு உன்னத கலைஞன்தான் கமல்ஹாசன். அவர்தான் கமலுக்கு நடிப்பு பாடம் கற்பித்த குருநாதர். கமலுக்கு மட்டுமல்ல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் நடிப்புக்கு குருநாதர் கே பாலசந்தர்தான், அதே போல் கே பாலசந்தரின் மற்றொரு கலைவாரிசாக இருந்தவர் நடிகர் நாகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி கே பாலசந்தர் மூலம் கலைப்பயிற்சி பெற்ற கமல்ஹாசன், இப்போது நடிப்பு துறைக்கே ஒரு டிக்ஸ்னரியாக விளங்குகிறார். சினிமா துறையில் அவர் அறியாத விஷயங்களே இல்லை என்னும் அளவுக்கு இந்த நிமிடம் என்ன அப்டேட் இருக்கிறதோ, அதைக் கற்றுக்கொண்ட, கற்றுக்கொள்கிற ஒரு மாணவனை போல கமல் சினிமாவை தொடர்ந்து கற்று வருகிறார். அதை தன் படங்களில் செயல்படுத்தியும் பார்க்கிறார்.
கடந்த 7 ஆண்டுகளாக விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், நேற்று திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். அவரது பங்கேற்பில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை, அடையாளத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி கமல்ஹாசன் திடீரென இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணம், தக்லைப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள வேண்டும். கல்கி 2898ஏடி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. அதற்கான கால்ஷீட் தர வேண்டும். மேலும் இந்தியன் 3 படப்பிடிப்பிலும் கமல் கலந்துக்கொள்ள இருப்பதால் இந்த முடிவு என்று கூறப்படுகிறது.
ஆனால் இவை மட்டுமின்றி, சமீபத்தில் தொழில்நுட்ப புரட்சியாக உள்ள ஏஐ தொழில்நுட்பம் குறித்து அமொிக்காவில் நடக்கும் 90 நாட்கள் பயிற்சி வகுப்பிலும் கமல்ஹாசன் பங்கேற்க இருக்கிறார். இதில் ஏஐ தொழில்நுட்பம் குறித்து கற்க இருப்பதால், அங்கு 90 நாட்கள் தங்க உள்ளதால்தான், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியதற்கு முக்கிய காரணம் என்ற தகவல் இப்போது வெளிவந்துள்ளது. 69 வயதிலும், சினிமாவுக்காக ஏஐ தொழில்நுட்பம் கற்கும் கமலின் ஆர்வம் பார்த்து ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.





