தமிழ் சினிமாவில் இசைப்புயல் என அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான். தமிழ் மொழி மீது அதிக பற்றும் காதலும் கொண்டிருப்பவர். அவரது இசையில் கோவையில் செம்மொழி மாநாடு நடந்த போது, செம்மொழியான தமிழ்மொழியே என்ற பாடலை தனது இசையால் திக்கெட்டும் ஒலிக்க செய்தவர்.
இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடகராகவும் ஏஆர் ரகுமான் பல படங்களில் பாடியிருக்கிறார். கடந்த ஆண்டில் ராயன் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து அவர் பாடிய அடங்காத அசுரன் தான் வணங்காத மனுஷன்தான் பாடல் பெரிய அளவில் வைரலானது. அதிலும் ஏஆர் ரகுமான் குரலில் உசுரே நீதானே என்ற வரிகள் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது.
இந்நிலையில் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, தமிழ் உலகின் செம்மொழிகளில் என்றும் பரிணமித்து வளரும் மிகத் தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ் சங்கங்கள் ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும் அதில் திருத்தங்களை செய்வதன் மூலம் அதனை செறிவாக்குவதிலும் இன்றியமையாத பங்கு வகித்துள்ளன.
இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே நமக்கு சுட்டிக்காட்டுகிறது. இதன் அடிப்படையில் ஏ ஆர் ஆர் இம்மர்ஸிங் என்டர்டெயின்மென்ட் குழு தமிழ் மொழிக்கான ஒரு பெருமை சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தமிழ் இலக்கியங்களை விளக்க படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்க இருக்கிறது ஏஆர்ஆர் இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் பெருமை சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்க உள்ளது. எதிர்காலத்தில் இப்பெருமை சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும்.
இது குறித்து மேலும் தகவல்களை வெளியிட இருக்கிறோம். இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம் என்று இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அந்த பதிவில் கூறி இருக்கிறார். தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழை கொண்டாடும் ஒரு அறிவிப்பை அவர் கூறியிருப்பதை ரசிகர்கள் வரவேற்று பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.





