அஜித் நடிப்பில் சரண் இயக்கத்தில் உருவான படம் காதல் மன்னன். கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த சரணின் முதல் படம் அது. அந்தப் படத்தில்தான் பரத்வாஜும் இசையமைப்பாளராக அறிமுகமானார். படம் எப்படி மெகா ஹிட்டானதோ அதேபோல் பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படத்தில் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றாரோ அதே அளவு பரத்வாஜும் பெற்றார்.
குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்ற உன்னை பார்த்த பின்பு நான் பாடல் இன்றுவரை க்ளாசிக் ரகத்தில் இருக்கிறது. பலரும் விரும்பி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். முதல் படத்தின் பாடல்கள் ஆல்பம் ஹிட்டான பிறகு பல வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. அவரும் அதனைப் பயன்படுத்தி ஹிட் பாடல்களை கொடுத்துக்கொண்டே இருந்தார்.
ஒரு இயக்குநருடன் செட் ஆகிவிட்டால் தொடர்ந்து அந்த இயக்குநரும், இசையமைப்பாளரும் பயணப்படுவார்கள். உதாரணத்திற்கு ஸ்ரீதர் – எம்.எஸ்.வி, பாலுமகேந்திரா – இளையராஜா, மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான், வெங்கட் பிரபு – யுவன், நெல்சன் – அனிருத், பிரபு சாலமன் – இமான் என அந்தப் பட்டியல் நீளும். அப்படித்தான் சரணுடன் பரத்வாஜுக்கு செட் ஆக தொடர்ந்து இருவரும் இணைந்தே பணியாற்றினர்.
அப்படி அவர்கள் பணியாற்றிய அமர்க்களம், அட்டகாசம், ஜெமினி, பார்த்தேன் ரசித்தேன், அசல் என அனைத்து படங்களின் பாடல்களுன் மெகா ஹிட்டாகின. பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட பரத்வாஜ் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கினார். இந்தச் சூழலில் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார் பரத்வாஜ்.
அந்தப் பேட்டியில் பேசிய அவர், “சினிமா ஒருவனது வாழ்க்கையை மாற்றும் என்பதற்கு நான் உதாரணம். காதல் மன்னன் ரிலீஸானதும் ஒரு வார இதழ் எனது புகைப்படத்தை போட்டு என்னுடைய இசையை புகழ்ந்து எழுதியிருந்தது. அது பெரிய அளவில் எனக்கு ரீச் கொடுத்தது. அந்தப் படத்தில் பணியாற்றியபோது எம்.எஸ்.விஸ்வநாதனுக்கென்று ஒரு பாடல் இருக்கும். அவரோ தம்பி நானே இசையமைத்துக்கொள்கிறேன் என சொல்லி அவ்வாறே செய்தார். ஆனால் படம் எல்லாம் முடிந்த பிறகு அவர் என்னிடம் தம்பி நான் அவசரப்பட்டுட்டேன். உன்னிடம் கொடுத்துருந்தா இன்னும் பிரமாதம் பண்ணிருப்ப என சொன்னது எனக்கு பொக்கிஷம்.
சரணும், வைரமுத்துவும் எனது வாழ்க்கையில் ரொம்பவே முக்கியமானவர்கள். இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன பாடல் விஜய்யை தாக்குவது போலவும், வசூல் ராஜாவில் கலக்கப்போவது யாரு பாடல் ரஜினியை தாக்குவது போன்றும் இருப்பதாக சொல்கிறீர்கள். அதெல்லாம் ப்ளான் பண்ணிதான் செய்தது.அதை இப்போது சொல்லலாம். வித்யாசாகர்தான் எனது எதிரி. என்னுடைய ஸ்டூடியோவுக்கு எதிரில்தான் அவரது ஸ்டூடியோவும் இருந்தது. அவர் எப்படி ஹிட்ஸ் கொடுக்கிறாரோ அதேமாதிரியான ஹிட்ஸை நானும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்” என கூறினார் பரத்வாஜ்.





