தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவரது தம்பி கங்கை அமரன். இவரும் இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குனராக உள்ளார். சமீபகாலமாக இளையராஜா தனது இசையில் உருவான பாடல்களை மற்ற படங்களில் பயன்படுத்த தடை விதித்து வருகிறார்.
கடந்த பல ஆண்டுகளாக தமிழ் படங்களில் பழைய பாடல்கள் அதிகளவில் பயன்படுத்துவது டிரண்டிங் ஆக மாறிவிட்டது. அதிலும் சூப்பர் ஹிட் பாடல்களாக இளையராஜா இசையமைத்த பாடல்களே பெரும்பாலும் இருப்பதால் அந்த பாடல்களை தங்களது படங்களில் இயக்குனர்கள் பயன்படுத்துகின்றனர்.
சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா இசையமைத்த ஒத்த ரூவா தாரேன் என் ஜோடி மஞ்சக்குருவி இளமை இதோ இதோ ஆகிய பாடல்களை தனது அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இளையராஜாவின் இந்த காப்பிரைட் விவகாரம் பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில், அவரது தம்பி கங்கை அமரன் இளையராஜாவின் செயலுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். எங்களது இசையை போட்டதால்தானே உங்கள் படம் ஜெயிக்கிறது. அந்த லாபத்தில் அண்ணன் பங்கு கேட்பதில் என்ன தவறு என்று இளையராஜா செயல் சரிதான் என்கிற வகையில் அவர் பேசியது இணையத்தில் வைரலானது.
ஆனால் இதே கங்கை அமரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா காப்புரிமை பிரச்னை குறித்து பேசியபோது, தனது அண்ணன் இளையராஜா குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், அண்ணன் செய்வது அசிங்கம். கேவலம். எத்தனையோ எம்எஸ்வி பாடல்களை சுட்டு அண்ணன் பாட்டு போட்டு இருக்கிறார். தியாகராஜர் கீர்த்தனைகளை பயன்படுத்தி இருக்கிறார்.
இதற்கெல்லாம் அவர் பணம் கொடுத்தாரா? நீ சாப்பிடுவது 2 இட்லி கொஞ்சம் சாப்பாடு. இல்லேன்னா 2 சப்பாத்தி. அப்படி இதுல காசு வாங்கி நீங்க அப்படி என்ன சம்பாதிக்க போற? என்று கோபமாக கங்கை அமரன் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார். இப்போது அந்த வீடியோவை நெட்டிசன்கள் சிலர் பகிர்ந்து அது போன வாரம்… இது இந்த வாரம்… என்று நடிகர் வடிவேலு பாணியில் இசையமைப்பாளர் கங்கை அமரனைக் கலாய்த்து வருகின்றனர்.





