தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இந்த படம் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. தொடர்ந்து முண்டாசுப்பட்டி ராட்சசன் ஜீவா மாவீரன் கிட்டு கட்டாகுஸ்தி லால் சலாம் என பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றார்.
நடிகராக மட்டுமின்றி நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். சிலுக்குவார்பட்டி சிங்கம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் கதாநாயகன் எப்ஐஆர் கட்டாகுஸ்தி உள்ளிட்ட சில படங்களை அவரே தயாரித்தும் இருக்கிறார். அவர் நடித்த படங்களில் ராட்சசன் முண்டாசுப்பட்டி போன்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் நடிகர் விஷ்ணு விஷால் மீது, ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது. ராட்சசன் படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இதில் ஹீரோ இந்த படத்தில் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்று புகார் தரப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிக்க நடிகர் விஷ்ணு விஷால் கமிட் ஆன போது, 80 நாட்கள் கால்ஷீட் தந்து அந்த அடிப்படையில் சம்பளம் பேசி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ராட்சசன் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ராம்குமார், இந்த படத்தையும் சூப்பர் ஹிட் படமாக தர அதிக கவனம் எடுத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறார்.
அதனால் இதுவரை 120 நாட்களுக்கு மேல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதாவது 80 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்து 120 நாட்களை கடந்துள்ளது. அதாவது 40 நாட்கள் கூடுதலாக படப்பிடிப்பு நடந்த நிலையில், இன்னும் 20 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என, நடிகர் விஷ்ணு விஷாலிடம் அவர் கேட்டிருக்கிறார்.
ஏற்கனவே 80 நாட்கள் சொல்லி நான் 120 நாட்கள் நடித்திருக்கிறேன். இன்னும் கூடுதல் நாட்கள் கால்ஷீட் கேட்டால் அதற்கேற்ப எனக்கு சம்பளம் கொடுங்கள் என்று விஷ்ணு விஷால், இயக்குனரிடம் பேசியிருக்கிறார். இந்த பிரச்னை தான் இப்போது புகாராக எழுந்துள்ளது. இந்த பஞ்சாயத்தில் டைரக்டர் மீது தவறா, அல்லது கூடுதலாக சம்பளம் கேட்ட ஹீரோ மீது தவறா என்ன தீர்ப்பு வரும் என்று படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.





