அஜித் குமார் நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதில் முதல் திரைப்படமான விடாமுயற்சி பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களை அந்த அளவு ஈர்க்கவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதியில் நன்றாக இல்லை என்று பலரும் கூறினர்.
அஜித்திற்கான மாஸ் காட்சிகளும் இல்லாததால் அவரது ரசிகர்களிடம் இந்த திரைப்படம் பெரிய அளவில் கொண்டு போய் சேரவில்லை. இதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இதனை இயக்கியிருந்தார்.
தமிழில் முதல்முறையாக மைத்திரி மூவிஸ் நிறுவனம் இதனை தயாரித்து இருந்தது. மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் சக்கை போடு போட்டது. ஒரு அஜித் ரசிகர் திரைப்படத்தை இயக்கினால் எப்படி இருக்கும் என்பதை கண்முன்னே காட்டி இருந்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை அஜித்திற்கான பில்டப் காட்சிகள் மிக அதிகமாகவே இருந்தன. ஆனால் அவை ரசிக்கும் வகையில் இருந்ததால் அது பல தரப்பினரிடமும் கொண்டு போய் சேர்ந்தது. இது மட்டுமல்லாமல் படத்தில் ரெட்ரோ பாடல்களை மிக அதிகமாகவே பயன்படுத்தி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.
அதிலும் சுல்தானா பாடல் மிகச்சரியாக கிளிக் அடித்ததால், இணையத்தில் வைரலானது. அதேசமயம் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தன. படத்தில் கதை என்பதை எதிர்பார்க்கவே முடியவில்லை என்றும், ஒரு அஜித்தின் மேஷப் போன்றே படத்தின் காட்சிகள் இடம் பெற்று இருப்பதாகவும் பலர் கூறினர்.
ஆனால் இது எதுவும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வசூலை பாதிக்கவில்லை. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் குவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. நெட்பிளிக்ஸில் வரும் எட்டாம் தேதி இந்த திரைப்படம் வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





