இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் பார்த்திபன். பிறகு புதிய பாதை என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் நாயகனாக இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்த படத்தில் நடிகை சீதா நாயகியாக நடித்திருந்தார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் பார்த்திபன் கூறியதாவது, புதிய பாதை படம் முதலில் ரிலீஸ் ஆகுமா என்பதே எனக்கு பெரிய சந்தேகமாக இருந்தது. அத்தனை பிரச்னைகள் இருந்தது. அதை எல்லாம் யோசிச்சுப் பார்த்தா இப்பவும் பயமா இருக்குது. படம் எடுத்து முடிச்சாச்சு. படத்தை எல்லாரும் பார்த்துட்டாங்க. படம் பார்த்தவங்க எல்லாம் நல்லா இருக்குன்னாங்க.
அந்த படத்துல ஒண்ணு ரெண்டு காமெடியான விஷயங்கள் எல்லாம் இருக்கும். அதை மீடியடே்டர்ஸ் வந்து தயாரிப்பாளர் சுந்தரம் கிட்ட எதையாவது தப்பா சொல்லிடுவாங்க. அவர் எப்பவுமே படப்பிடிப்பு தளத்துக்கு வரமாட்டார். டைரக்டர் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று நினைப்பவர். அந்த ப்ரீடம் டைரக்டருக்கு கொடுப்பார்.
அப்போ அவரிடம் யாராவது ஒண்ணை சொல்லிடுவாங்க. பேண்ட்டுக்கு மேல லுங்கியை கட்டிட்டு நடிக்கிறாருங்க. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது என அவரிடம் சொல்லிடுவாங்க. உடனே அவர் ஷூட்டிங்கை 2 நாட்களுக்கு நிறுத்திடுவார். நான் அவரை கன்வின்ஸ் பண்ணிய பிறகு மறுபடி ஷூட்டிங் நடக்கும்.
ஒரு சீன்ல ஒரு பொம்பளை முடியை பிடிச்சு அடிப்பேன். அதை போய் பத்த வெச்சிடுவாங்க, பெண்களே யாரும் படம் பார்க்க வரமாட்டாங்கன்னு அவர்கிட்ட சொல்லிடுவாங்க. மறுபடியும் அவர் ஷூட்டிங்கை நிறுத்திடுவார். அப்புறம் நான் போய் அவரை கன்வின்ஸ் பண்ணிய பிறகு மறுபடி ஷூட்டிங் நடக்கும். இப்படியே ஒவ்வொண்ணா நடந்துட்டே இருக்கும்.
அப்புறம் படம் எடுத்து முடித்த பிறகு எல்லாரும் படம் பார்த்த பிறகு இப்படி ஒரு பிரச்னையை கிளப்பி விட்டுட்டாங்க. இந்த படத்துல பாப்புலர் ஆர்ட்டிஸ்ட் சீதா தான். பார்த்திபன் கிடையாது. அவன் புது பையன். படத்துல கிளைமாக்ஸ்ல கதாநாயகி சீதா இறந்ததுக்கு அப்புறம் ஒன்றரை ரீல் இந்த படம் ஓடுது. யாரும் பார்க்க மாட்டாங்க, அதை மாத்தச் சொல்லுங்க என்று போட்டுக் கொடுத்து விட்டனர். அதையும் எப்படியோ சமாளிச்சேன் என்று நடிகர் பார்த்திபன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





