- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர்களை யாரும் இப்படி நெறிப்படுத்தலையே … பலே பாண்டியா… என நடிகர் சூரியை பாராட்டிய கவிஞர்...

அவர்களை யாரும் இப்படி நெறிப்படுத்தலையே … பலே பாண்டியா… என நடிகர் சூரியை பாராட்டிய கவிஞர் வைரமுத்து!

- Advertisement -

தமிழ் சினிமாவை பொருத்தவரை கதாநாயகன்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் காலத்தில் இருந்தே மிக அதிகமாக தான் இருந்து வருகிறது. ரசிகர்களாகிய மக்கள் தந்த செல்வாக்குதான் எம்ஜிஆரை தமிழக முதலமைச்சராக்கியது. இப்போது நடிகர் விஜயும் அதே பாணியில்தான் தவெக கட்சித் தலைவராக அரசியல் களத்தில் நிற்கிறார்.

தனது ரசிகர் மன்றங்களை ஒரு கட்டத்தில் நற்பணி இயக்கமாக மாற்றி மக்களுக்கு உதவிகளை செய்ய வைத்தார் நடிகர் கமல்ஹாசன். எனக்கு ரசிகர்களாக இருந்தால் போதும், மன்றங்கள் தேவையில்லை என கலைத்தார் நடிகர் அஜீத்குமார். தனது ரசிகர் மன்றங்களை எல்லாம் இணைத்து தேசிய முற்போக்கு திராவிட கழகமாக மாற்றியவர் கேப்டன் விஜயகாந்த்.

ஆனால் ரஜினிகாந்த் போன்றவர்கள் தங்களது வளர்ச்சிக்காக மட்டுமே ரசிகர்களை பயன்படுத்திக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டுகளும் இருந்தே வருகின்றன, தங்கள் படம் ரிலீஸ் நேரத்தில் போஸ்டர் ஒட்டவும் தோரணம் கட்டவும் படம் வெற்றி பெற கோவில்களில் பூஜை செய்யவும் அலகு குத்தி தேர் இழுக்கவும் என ரசிகர்கள் செய்த பல விஷயங்களை அந்த நடிகர்கள் தடுக்கவோ கண்டிக்கவோ இல்லை.

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறிய நடிகர் சூரி இதுபோன்ற ஒரு செயலை வன்மையாக பகிரங்கமாக கண்டித்திருக்கிறார். மாமன் படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட்ட சில ரசிகர்களை, நீங்கள் என் தம்பிகளாக என் ரசிகர்களாக இருக்க கூட தகுதியில்லை. முட்டாள்தனமான இதுபோன்ற செயலை செய்யாதீர்கள். உங்களால் நிறைய வேதனைப்பட்டேன் என்று கூறியிருக்கிறார். ரசிகனாக நீ எது செய்தாலும் எந்த கோமாளித்தனத்தில் ஈடுபட்டாலும் அது எனக்கு ஒருவிதத்தில் விளம்பரம்தான் என கருதும் நடிகர்களுக்கு மத்தியில் சிறந்த மனிதராக சூரி உயர்ந்து நிற்கிறார்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தன் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, திரைக்கலைஞர் தம்பி சூரியை பாராட்டுகிறேன். தனது திரைப்பட வெற்றிக்காக மண்சோறு தின்ற ரசிகர்களை பகிரங்கமாக சாடி இருக்கிறார். மண்ணிலிருந்து தானியம் வரும். தானியம் சோறாகும் ஆனால் மண்ணே சோறாக முடியாது. இந்த அடிப்படை பகுத்தறிவு இல்லாதவர்கள் தன் ரசிகர்களாக இருக்க முடியாது என்று சொல்வதற்கு துணிச்சல் வேண்டும்.

கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ரசிகர் கூட்டத்தை இப்படி நெறிப்படுத்தி வைத்திருந்தால் கலையும் கலாச்சாரமும் மேலும் மேலும் மேம்பட்டிருக்கும். மண் சோறு தின்றால் ஓடாது. மக்களுக்கு பிடித்தால் மாமன் ஓடும். பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை பலே பாண்டியா என்று பாராட்டுகிறேன் என்று கவிஞர் வைரமுத்து அந்த பதிவில் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்