நடிகர் சூரி நடிப்பில் இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் மாமன். இந்த படம் கடந்த 16ம் தேதி வெளியானது. விடுதலை விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி ஆகிய 4 படங்களை தொடர்ந்து நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த படம்தான் மாமன். இந்த படத்தின் கதை ஆசிரியரும் நடிகர் சூரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மாமன் படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா மற்றும் ராஜ்கிரண் பாலசரவணன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். தாய் மாமன் உறவை மையப்படுத்திய இந்த கதையில் நடிகர் சூரி தனது அழுத்தமான நடிப்பை பல காட்சிகளில் வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்.
சமீபகாலமாகவே நல்ல கதையம்சம் உள்ள சின்ன பட்ஜெட் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றியடைகின்றன. ஏனெனில் பான் இந்தியா படங்கள் என்ற பெயரில் வெளியாகும் கமர்ஷியல் குப்பை படங்களுக்கு மத்தியில் பார்க்கிங் லப்பர் பந்து குட்நைட் குடும்பஸ்தன் டூரிஸ்ட் பேமிலி போன்ற யதார்த்த படங்களை காணும்போது ரசிகர்களின் மனம் நெகிழ்கிறது.
திரைப்படம் என்பது பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே என்பதை கடந்து இப்போது கோடிகளில் பணம் புரளும் வியாபாரமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. கலை என்பது சினிமாவில் மறைந்து போய் வியாபாரமும் லாபமும் மட்டுமே உச்சத்தில் இருக்கிறது. ரசிகர்களுக்காக படம் எடுக்காமல் ஹீரோக்களுக்காக இயக்குனர்கள் படம் எடுக்கின்றனர்.
அதனால் சில நூறு கோடிகளை முதலீடாக போட்டு பல நூறு கோடிகளை லாபமாக அள்ளும் நோக்கம் கொண்ட நடிகர்கள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்களால் தமிழ் சினிமா மெல்ல மெல்ல அழிந்துக்கொண்டு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ் சினிமாவை மீட்டெடுக்கும் முயற்சியாக தான் சில நல்ல படங்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மாமன் படத்துக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு தந்து வருகின்றனர். முதல் நாளில் 2.9 கோடி 2ம் நாளில் 5 கோடி 3வது நாளில் 9 கோடி என மாமன் படம் கடந்த 4 நாட்களில் மொத்தம் ரூ. 12 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருக்கிறது. இன்னும் வரும் நாட்களில் மாமன் படம் வசூல் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.





