நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ராயன். கடந்த ஆண்டில் இந்த படம் வெளியானது. இந்த படம் தனுஷின் 50வது படமாகும். ராயன் படத்தை தனுஷ் டைரக்ட் செய்து நாயகனாக நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான இந்த படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.
இந்த படத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி நிலவுக்கு என் மேல் என்னடி என்ற கோபம் என்ற படம் வெளியானது. இந்த படத்தில் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் சரியான வரவேற்பை பெறவில்லை.
இதையடுத்து நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்கத்தில் உருவான இட்லி கடை படம் கடந்த ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே தேதியில் நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வெளியாகும் என்பதால் இட்லி கடை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இது தனுஷ் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.
இதற்கிடையே தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த குபேரா படம் ரிலீஸ்க்கு தயாராக இருந்தது. படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவும் நடித்திருக்கிறார். இந்த படம் ஏற்கனவே சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் வருகிற ஜூன் 20ம் தேதி இந்த படம் ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இன்றைய லேட்டஸ்ட் நிலவரத்தின்படி குபேரா படம் வருகிற ஜூன் 20ம் தேதி ரிலீஸ் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி அவர் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தாலும் அவரது படங்கள் ரிலீஸ் ஆவதில் நீடிக்கும் தாமதம் அவரது ரசிகர்களை பயங்கரமாக கடுப்படைய வைக்கிறது. இப்போதைக்கு குபேரா படம் ரிலீஸ் ஆகாது என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில் தெலுங்கில் முன்னணி நடிகராக, நடிகர் சிரஞ்சீவியின் தம்பியாகவும் உள்ள ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்த ஹரிஹர வீரமல்லு என்ற படம் வருகிற ஜூன் 12ம் தேதி ரிலீஸாக உள்ளது. மாஸ் ஹீரோவான அவரது படம் வெளியானால் ஆந்திராவில் 2 வாரங்களுக்கு தியேட்டர்கள் எதுவும் கிடைக்காது என்பதால், ஜூன் 20ம் தேதி குபேரா ரிலீஸ் என்ற முடிவை படக்குழு மாற்றிக்கொண்டு விட்டது. எப்போது குபேரா ரிலீஸ் என்ற தகவல் விரைவில் வெளியாகலாம்.





