இயக்குனர் மணிரத்னம் இந்திய அளவில் கவனிக்கப்படும் ஒரு முன்னணி இயக்குனராக உள்ளார். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் 2 பாகங்களாக இயக்கினார் மணிரத்னம். ஆனால் இதில் முதல் பாக படத்துக்கு கிடைத்த வரவேற்பும் ஆதரவும் 2ம் பாக படத்துக்கு கிடைக்கவில்லை.
பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனதற்கு காரணம் நாவலில் வந்த முடிவை படத்தில் மாற்றியதுதான் என்று கூறப்பட்டது. கதையின் முடிவையே படத்தின் முடிவாக வைத்திருந்தால் 2ம் பாகமும் பெரிய வெற்றியை பெற்றிருக்கும். மணிரத்னம் அந்த விஷயத்தில் சொதப்பி விட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது.
இந்நிலையில் நடிகர்கள் கமல்ஹாசன் சிம்பு அசோக் செல்வன் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் திரிஷா அபிராமி உள்ளிட்டோர் நடித்த தக்லைஃப் படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். வருகிற ஜூன் 5ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. பான் இந்தியா படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
தக்லைஃப் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் கமல்ஹாசன் சிம்பு உள்ளிட்டோர் தொடர்ந்து பங்கேற்று பேசி வருகின்றனர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மணிரத்னம் கூறியதாவது, சமூகத்தில் நடக்கும் சில விஷயங்களை மக்கள் புறக்கணிக்க நினைக்கிறார்கள்.
நிஜ வாழ்க்கையில் சற்று வயதானவர்கள் இளமையான ஆண் அல்லது பெண்ணுடன் உறவு வைத்திருப்பார்கள். அது வாழ்க்கையின் உண்மை. அது நீண்ட காலமாக இருக்கிறது. இப்போதும் இருக்கிறது. அதுவே சினிமாவில் வரும்போது அதில் தவறு கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். அல்லது அது ஒரு வழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதுபோன்ற உறவுகளை திரையில் பார்க்கும்போது வித்தியாசமாக மதிப்பிடக்கூடாது.
கமல் மற்றும் திரிஷாவை அந்த கேரக்டர்களாக மட்டுமே பார்க்க வேண்டும். கமல் திரிஷாவாக பார்க்க கூடாது என்று தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் தக்லைஃப் படத்தில் வயதான தோற்றத்தில் இருக்கும் கமல்ஹாசன் இளமையான திரிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வருகின்றன. அதேபோல் நடிகை அபிராமிக்கு கமல்ஹாசன் முத்தம் கொடுக்கும் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன. அது குறித்து எழுந்த சர்ச்சைக்குதான் இயக்குனர் மணிரத்னம் இப்படி ஒரு விளக்கம் தந்திருக்கிறார்.





