சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன் சிம்பு இயக்குனர் மணிரத்னம், இசைப்புயல் ஏஆர் ரகுமான் மற்றும் சிறப்பு விருந்தினராக கன்னட பட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய கன்னட நடிகர் சிவராஜ்குமார், நான் கமல்ஹாசனின் மிக தீவிரமான ரசிகன் என்று பெருமிதமாக கூறினார்.
இந்த விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், சிவராஜ்குமார் குடும்பம் என் குடும்பம் போன்றது. அவர் பேசும் மொழியும் தமிழிலிருந்து பிறந்தது என்று குறிப்பிட்டார். அதாவது தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது என்ற கருத்தை வெளியிட்டார். இந்த கருத்து இப்போது கர்நாடகாவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழிலிருந்து பிறந்த மொழி என கன்னடத்தை நடிகர் கமல்ஹாசன் குறைத்துப் பேசியதாக கூறி சமூக வலைதளங்களில் கமலுக்கு எதிராக விமர்சனம் குவிந்து வருகின்றன. 6.5 கோடி கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தும் விதமாக கமல்ஹாசன் பேசி விட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். நடிகர் கமலின் இந்த பேச்சை கண்டித்து கன்னட ரக்சனா வேதிகை உள்ளிட்ட பல அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
தமிழ் கன்னடத்தை விட சிறந்தது என கூறுவது முழுமையாக தவறானது எனக் கூறியுள்ள அவர்கள், அத்தகைய கருத்து கூறும் நடிகரின் படங்களை கர்நாடகாவில் இனி வெளியிட அனுமதிக்க கூடாது எனவும் கொந்தளித்து போய் எச்சரித்துள்ளனர். இப்படி பலவிதங்களில் கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
மேலும் இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பாஜக தலைவர் விஜயேந்திரா கூறுகையில், கன்னடத்தின் 2500 ஆண்டு கால பாரம்பரியத்தை கேள்விக்குள்ளாக்குவது போல் பேசுவது மிகவும் கவலை தருகிறது. கமல் நீங்கள் கன்னடத்தில் நடித்திருந்தாலும் இப்போது நன்றி மறந்து அவமதிக்கிறீர்கள் என்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
இப்படி கன்னட மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் தரப்பிலும் கமல் சொன்ன கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் தக்லைஃப் படத்தின் வெளியீட்டை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடத்தும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் தக்லைஃப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆதில் சிக்கல் உருவாகியுள்ளது. ராஜ்யசபா எம்பி ஆக போகிற சந்தோஷத்தில் இப்படி யோசிக்காமல் பேசி விவகாரம் பண்ணி விட்டாரே என்று தக்லைஃப் படக்குழுவினர் கவலையில் உள்ளனர்.





