நடிகர் விஜய் கடந்த 2 ஆண்டுகளாக கல்வி விருது வழங்கும் விழாவை நடத்தி மாணவ மாணவியருக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டில் ஒரே நாளில் இந்த விழா நடத்தப்பட்டது. காலை துவங்கிய இந்த விழா இரவு வரை நீடித்த நிலையில், கடந்தாண்டில் இந்த விழா 2 நாட்களுக்கு நடத்தப்பட்டது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 என 2 நாட்களாக நடத்தப்பட்ட இந்த விழாவிலும் அதிக நேரமானது. அதனால் இந்த முறை 3 நாட்களுக்கு இந்த விழாவை நடத்த நடிகர் விஜய் திட்டமிட்ட நிலையில் இன்று முதல் நாளில் இந்த விழா, சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த விழாவில் மொத்தம் 68 தொகுதிகளை சேர்ந்த கடந்த பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியர் தங்கள் பெற்றோருடன் பங்கேற்றனர்.
கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தவெக தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது, நான் 2 ஆண்டுகளுக்கு முன்னாடி இதே மாதிரி நடந்த ஸ்டூடண்ட்ஸ் பங்ஷன்ல சொல்லி இருந்தேன். இந்த காசு கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயிச்சிடலாம்ன்னு நெனைக்கறாங்க இல்லையா? அந்த கல்ச்சரையே யாரும் என்கரேஜ் பண்ணாதீங்க யாரும் காசு வாங்காதீங்க உங்க பெற்றோர்கள் கிட்டேயும் எடுத்துச் சொல்லுங்க என்று அன்று நான் சொன்னேன்.
அதை அப்படியே பாலோ அப் பண்ணுங்க. ஆனா நீங்க வேணா பாருங்க. அடுத்த வருஷம் என்ன நடக்கப் போகுதுன்னு பாருங்க. வண்டி வண்டியா கொண்டு வந்து கொட்டப் போறாங்க. அது அத்தனையும் உங்ககிட்ட இருந்து கொள்ளையடிச்ச பணம்தான். என்ன பண்ணப் போறீங்க? என்ன பண்ணனும் என்று உங்களுக்கு கரெக்டா தெரியும். அதை நான் சொல்லிதான் உங்களுக்கு புரிய வைக்கணும் என்று ஒன்றும் அவசியம் இல்லை.
மைடியர் பேரண்ட்ஸ் உங்ககிட்ட ஒரு சின்ன ரெக்வெஸ்ட். உங்க குழந்தைகளோட விஷயத்தில் எதிலேயும் ரொம்ப போர்ஸ் பண்ணாதீங்க. பிரஷர் பண்ணாதீங்க. போர்ஸ் பண்ணாதீங்க. முதலில் அவங்களுக்கு என்ன பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி வழி நடத்துங்க.
நான் உறுதியாக சொல்றேன். எத்தனை தடைகள் வந்தாலும் அவங்கவங்களுக்கு பிடிச்ச விஷயத்துல அவங்கவங்களுக்கு பிடிச்ச துறையில் கண்டிப்பா சாதிச்சு காட்டுவாங்க என்று அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியிருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் வண்டி வண்டியாக பணத்தை கொண்டு வந்து கொட்டுவாங்க என்று நடிகர் விஜய் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





