நடிகர் விஜய் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் நாளைய தீர்ப்பு. இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்து விஜயகாந்துடன் விஜய் இணைந்து நடித்த செந்தூரப்பாண்டி விஜய்க்கு நல்ல ஒரு அடையாளத்தை தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்தது.
அதன்பிறகு அவர் நடித்த தேவா ரசிகன் போன்ற படங்கள் அதிரடி ஹீரோவாக காதல் சேட்டைகள் செய்யும் ஒரு குறும்புக்கார வாலிபராக மட்டுமே ரசிகர்கள் மத்தியில் அவரை கொண்டு சென்றது. ஆனால் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்றுத் தந்த படம் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக படம்தான்.
தான் காதலிக்கிற பெண். மற்றொரு ஆணை விரும்புகிற நிலையில், அந்த காதலுக்கு எதிர்ப்பாக இருக்கும் அவர்களின் பெற்றோரை சமாதானப்படுத்தி அந்த 2 குடும்பங்களை சேர்த்து வைக்கும் வேலையில்லாத பட்டதாரி இளைஞன் கேரக்டரில் நடிகர் விஜய் இந்த படத்தில் நடித்திருந்தார். படத்தின் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் என பூவே உனக்காக படம் பெரிய அளவில் வெற்றி பெற்று, விஜய்க்கு மரியாதையான அங்கீகாரத்தை கொடுத்தது.
இந்த படம் குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, பூவே உனக்காக படத்துக்கு முன்னாடி விஜயை ஒரு தடவை பார்த்திருக்கேன். டைரக்டர் ஷங்கர் திருமணத்துக்கு விஜய் வந்திருந்தார். அப்போ நான் அங்கே போயிருந்தேன். அப்போ அவர் மேடையில் இருந்தார். இவர் எஸ்ஏசி சார் பையன் என்று எனக்கு தெரியும். ஆனா அவர் நடிச்ச எந்த படத்தையும் நான் பார்க்கலே.
அவர் அதுவரைக்கும் நாளைய தீர்ப்பு செந்தூரப்பாண்டி தேவா ரசிகன்னு 4 படம் நடிச்சிருந்தார். இதுல எந்த படத்தையும் நான் பார்த்தது இல்லே. ஜெயா டிவியில் ரசிகன் படத்துல இருந்து ஒரு பாட்டு, இந்த பாடலை பாடிக்கொண்டிருப்பவர் விஜய் அப்படீன்னு ஸ்க்ரோலிங் போட்டு விஜயே பாடி ஆடின ஒரு பாட்டை நான் பார்த்தேன்.
அந்த பாட்டு டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அவருடைய எக்ஸ்பிரஷன் டான்ஸ் மூவ்மென்ட் அவரோட குரல் எல்லாமே ரொம்ப பிடிச்சிருந்தது. அப்போ இந்த பூவே உனக்காக கதைக்கு இவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தேன் என்று கூறியிருக்கிறார். அந்த பாடல் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி இங்கே பாரு செவத்த குட்டி என்ற பாடல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.





