நடிகர் ரவி மோகன், ஆரம்பத்தில் ஜெயம் என்ற படத்தில் நடித்துதான் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். எடிட்டர் மோகனின் 2வது மகன்தான் இவர். முதல் மகன் மோகன் ராஜா இயக்கிய படம்தான் ஜெயம். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் ஜெயம் ரவி என்ற பெயரில்தான் ரசிகர்கள் மத்தியில் அவர் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது பெயர் இனி ஜெயம் ரவி அல்ல, ரவி மோகன் என மாற்றிவிட்டதாக அவரே அறிவித்தார். மேலும் இனி எல்லோரும் ரவி மோகன் என்றே குறிப்பிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். அவரது அண்ணன் மோகன் ராஜா என தந்தை பெயரை முன்னால் சேர்த்து வைத்துக்கொண்டார்.
அதே போல் ஜெயம் ரவியும் தனது அப்பா பெயரை பின்னால் சேர்த்து ரவி மோகன் என வைத்துக்கொண்டார் என்றும் பேசப்பட்டது. ஆனால் பெயரில் இருந்த ஜெயம்தான் அவருக்கு பெரிய அடையாளமாக இருந்தது. இப்போது பலரும் நடிகர் ரவி மோகன் என்றால் யாரேனும் புதுமுக நடிகரா என்றுதான் யோசிக்கின்றனர்.
நடிகராக உள்ள ரவி மோகன் விரைவில் நடிகர் யோகிபாபு நடிக்கும் ஒரு படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார். மேலும் ரவி மோகன் ஒரு படத்தை தயாரிக்கிறார். அந்த படத்தில் ரவி மோகனுடன் நடிகர் எஸ்ஜே சூர்யாவும் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தை ரவி மோகன் தனது சொந்த நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்க உள்ளார்.
முதலில் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஜெயம் ஸ்டுடியோஸ் என்றுதான் ரவி மோகன் பெயர் வைத்திருக்கிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக பாடகி கெனிஷாவின் பெயரும் இருக்கிறது. இவர் நடிகர் ரவி மோகனின் மிக நெருக்கமான தோழி என்பது அனைவரும் அறிந்ததுதான். சமீபத்தில் கெனிஷா, ரவி மோகன் குறித்து நிறைய செய்திகள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜெயம் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் நடிகர் ரவி மோகன் பெயர் வைக்க அவரது குடும்பம் சார்ந்தவர்கள், அதாவது அவரது அப்பா எடிட்டர் மோகன், அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா ஆகியோர் சம்மதிக்கவில்லை. ஏனெனில் அதில் பாடகி கெனிஷாவும் இயக்குனராக இருப்பதால்தான். இதையடுத்துதான் சிங்கம் லோகோவுடன் தனது ரவி மோகன் ஸ்டுடியோஸ் நடிகர் ரவிமோகன் ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் செய்திருக்கிறார்.





