இந்திய சினிமா மட்டுமல்ல உலக சினிமாவே அண்ணாந்து பார்க்கும் உயரத்திற்கு சென்று விட்டார் நடிகர் அல்லு அர்ஜுன். தெலுங்கு சினிமாவின் மிக முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக இருந்த அவருக்கு, புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. எப்படி நடிகர் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் அறியும் நடிகராக மாறினாரோ அதேபோலத்தான், அல்லு அர்ஜுனுக்கும் புஷ்பா திரைப்படம் அமைந்தது.
இதன் முதல் பாகம், தெலுங்கு மட்டுமின்றி தமிழ் கன்னடம் மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஹிட் அடித்தது. புஷ்பா அடங்காதவன் என பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டு, தாடியை ஒரு கையால் சீவிக் கொண்டு சண்டையிடும் அல்லு அர்ஜுனை பலரும் விரும்பினர். இந்த திரைப்படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.
இப்படி புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் அவருக்கு பெயரை வாங்கி கொடுக்க, இரண்டாம் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், வசூல் ரீதியாக அந்த திரைப்படம் சக்கை போடு போட்டது.
சொல்லப்போனால் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அந்த திரைப்படம் வசூல் ஈட்டியது. இப்படியான சூழலில் அல்லு அர்ஜுனின் அடுத்த திரைப்படம் குறித்து எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது. அவர் யாரது இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்று பலரும் பேசி வந்தனர். இப்படியான சூழலில் அவர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
அடுத்ததாக அவர் அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. அறிவியலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்க இருப்பது அதன் அறிவிப்பு வீடியோவிலேயே தெரியவந்தது.
இதற்காக அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய vfx நிறுவனத்தில், அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் சென்று பயின்ற காட்சிகள் வெளியாகின. இந்த நிலையில் படத்திலிருந்து முக்கியமான அறிவிப்பு நாளை வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இந்த திரைப்படத்தில் இணைந்து இருப்பதாகவும், இது தொடர்பான அறிவிப்பே வெளியாக இருப்பதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





