நடிகர் ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் முதன் முறையாக இணைந்துள்ள இந்த படம் பிளாக் பஸ்டர் மூவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த கூலி படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கூலி படத்தில் 37 ஆண்டுகளுக்கு பின் நடிகர் சத்யராஜ் ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார். கடைசியாக 1987ம் ஆண்டில் ரஜினியுடன் சத்யராஜ் மிஸ்டர் பாரத் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் மீண்டும் இருவரும் இணையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கூலி படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா மலையாள நடிகர் சவுபிர் சாஹிர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா இந்தி நடிகர் அமீர்கான் ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்ருதிஹாசன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கூலி படம் ரிலீஸ் செய்ய இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்துக்கான வியாபாரத்தை துவங்கி விட்டது. ஆந்திராவில் இந்த படத்தை தியேட்டர்களில் வினியோகம் செய்ய ரூ. 50 கோடி என விலை நிர்ணயித்துள்ளது. ஆனால் அந்த விலை கொடுத்து வாங்க தெலுங்கில் உள்ள வினியோகஸ்தர் யாரும் முன்வரவில்லை.
இதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் வெளியான தக்லைஃப் படத்துக்கு கிடைத்திருக்கும் மோசமான தோல்விதான். மணிரத்னம் கமல்ஹாசன் ஏஆர் ரகுமான் என ஜாம்பவான்கள் இணைந்த கூட்டணியில் உருவான படமே மொக்கை படமாக பிளாப் ஆகும் போது ரஜினிகாந்த் படம் மட்டும் வசூலை வாரிக் குவிக்கும் என்று வினியோகஸ்தர்கள் மத்தியில் சந்தேகமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
அதனால் கூலி படத்தை ஆந்திராவில் வெளியிட அதிகபட்சமாக ரூ. 36 கோடி வரை தரலாம் என அங்குள்ள மிகப்பெரிய வினியோகஸ்தர்களில் ஒருவரான சுனில் என்பவர் மட்டுமே முன்வந்திருக்கிறார். அதுவும் விருப்பமிருந்தால் கொடுங்கள், இல்லை என்றால் பரவாயில்லை என்று தட்டிக்கழிக்கும் விதமாக கூறியிருக்கிறார். இதனால் தக்லைஃப் படத்தின் தோல்வி மூலம் கமல் கூலி படத்துக்கு ஆப்பு வைத்துவிட்டாரே என ரஜினிகாந்த் பயங்கர அப்செட்டில் இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.





