ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். தங்கக் கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதற்கு கூலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதில் ரஜினிகாந்த், தனது ஆரம்பகால வசனமான ‘அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்’ என்ற வசனத்தை பேசினார். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.
படம் துறைமுகம் சார்ந்த கதை என்பதால், அது தொடர்பான செட்டிங் விசாகப்பட்டினத்தில் அமைக்கப்பட்டது. அங்கு நீண்ட நாட்கள் காட்சிகளை படமாக்கினார் லோகேஷ் கனகராஜ். இதில் சைமன் கதாபாத்திரத்தில் வில்லனாக வருகிறார் நாகர்ஜுனா. நீண்ட நாட்களுக்குப் பிறகு சத்யராஜ் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கிறார்.
அவருக்கு ராஜசேகர் என்னும் ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த, சௌபின் சபீர் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளார். கன்னட நடிகர் உபேந்திராவும் இருக்கிறார். ரஜினிக்கு தேவா எனும் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். விசாகப்பட்டினத்தில் நீண்ட நாட்கள் சூட்டிங் நடைபெற்ற போது, சென்னை திரும்பியதும் ரஜினிகாந்திற்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், வீடு திரும்பினார். சில காலம் ஓய்வில் இருந்த அவர் மீண்டும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது முக்கியமான காட்சிகளை ஜெய்பூரில் படமாக்க திட்டமிட்டு உள்ளார் லோகேஷ் கனகராஜ். இதில் ரஜினிகாந்த் மற்றும் ஹிந்தி நடிகர் அமீர்கான் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்படுகிறதாம்.
அமீர்கான் இந்த திரைப்படத்தில் நடிப்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அது குறித்து படக்குழுவும் வாய் திறக்கவில்லை. இப்படியான சூழலில் தான் ஜெய்ப்பூரில் நடைபெறும் படப்பிடிப்பில் அமீர்கான் பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட ரஜினி ரசிகர்கள் நிச்சயம் இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.





