இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படத்தில் புதுமுக நடிகையாக அறிமுகமானவர் ஊர்வசி. முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ஊர்வசி ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அதிலும் திருமணமான பள்ளி ஆசிரியரை 2வது திருமணம் செய்துகொள்ள அபாண்டமாக பாக்யராஜ் மீது பொய் சொல்லும் திருமணம் செய்துக்கொள்ளும் பரிமளம் கேரக்டரில் ஊர்வசி வாழ்ந்திருந்தார்.
தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக இன்னும் பிஸியான நடிகையாக ஊர்வசி நடித்துக் கொண்டிருக்கிறார். கதாநாயகியாக மட்டுமின்றி பல படங்களின் காமெடி கேரக்டர்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்துவரும் நடிகை ஊர்வசிக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்போதும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.
கடந்த 2000ம் ஆண்டில் மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனை நடிகை ஊர்வசி திருமணம் செய்து கொண்டார். தமிழில் தூள் மற்றும் திருமலை உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்திருக்கிறார். 8 ஆண்டுகள் மட்டுமே மனோஜ் கே ஜெயனும் ஊர்வசியும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் 2008ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இவர்களுக்கு தேஜா லட்சுமி என்கிற மகள் இருக்கிறார்.
விவாகரத்துக்கு பிறகு நடிகர் மனோஜ் கே ஜெயன் ஆஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தேஜா லட்சுமி தற்போது தனது தந்தையுடன் தான் இருந்து வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் சுந்தரியாய ஸ்டெல்லா என்கிற படத்தில் தேஜா லட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் மனோஜ் கே ஜெயன் பேசியதாவது, தேஜா லட்சுமி எனக்கு நடிக்க விருப்பம் இருக்கிறது என்று முதன்முதலில் என் மனைவி ஆஷாவிடம் தான் கூறினார். ஆஷா அவரது அம்மா மட்டுமல்ல, நல்ல தோழியும் கூட; இருந்தாலும் தேஜா லட்சுமி அவரது அம்மா ஊர்வசியிடம் தனது விருப்பத்தை தெரிவித்து அனுமதி கேட்க சொல்லி சென்னைக்கு அவரை அனுப்பி வைத்தேன்.
ஊர்வசி சம்மதித்ததால் தான் தேஜா லட்சுமி சினிமாவில் நுழைந்துள்ளார். இந்த படத்தில் நடித்துள்ளார். ஒருவேளை மகள் நடிப்பதற்கு ஊர்வசி தடை போட்டு இருந்தால் அதில் என்னால் தலையிட முடியாது. அந்த வகையில் மகளின் விருப்பம் அறிந்து செயல்பட்டு இருக்கிறார் ஊர்வசி என்று நடிகர் மனோஜ் கே ஜெயன் உருக்கமாக பேசியிருக்கிறார். விரைவில் ஊர்வசி மகள் தேஜா லட்சுமி தமிழ் படங்களிலும் நடிக்க அதிக வாய்ப்புள்ளது.





