தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் அதிக கவனம் பெற்ற முன்னணி நடிகராக இருந்தவர் ராம்கி. இணைந்த கைகள், செந்தூரப்பூவே, இரண்டில் ஒன்று, சின்னப்பூவே மெல்லப்பேசு மருதுபாண்டி கருப்பு ரோஜா பெண்புத்தி முன்புத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். காமெடி, ஆக்சன், காமெடி நடிப்பில் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தவர்.
அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்ட நடிகர் ராம்கி, தனக்கு பிடித்தமான கேரக்டர்களில் மட்டுமே அவ்வப்போது நடித்து வந்தார். அதனால் விஸ்வநாதன் ராமமூர்த்தி வனஜா கிரிஜா இரட்டை ரோஜா எனக்கொரு மகன் பிறப்பான் மாயா பஜார் போன்ற படங்களிலும் நடித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தில் ஆண்டனி என்ற முக்கியமான கேரக்டரில் ராம்கி நடித்திருந்தார். படத்தில் சில காட்சிகளே ராம்கி வந்தாலும் படத்தில் அவரது நடிப்பு வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. ஹீரோவின் முன்னேற்றத்துக்கு உதவும் முக்கிய கேரக்டரில் ராம்கி நடிப்பு பேசப்பட்டது.
இதையடுத்து நடிகர் ராம்கி தொடர்ந்து பல நேர்காணல்களில் பங்கேற்று பேசி வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ராம்கி கூறியதாவது, நடிக்க வருவதற்கு முன்பு சில படங்களில் உதவியாளராக பணி செய்திருக்கிறேன். ஆபாவாணன் நான் எல்லாம் ஒன்றாக படித்தவர்கள் என்பதால் அவரது படங்களில் நான் வேலை செய்திருக்கிறேன்.
விஜயகாந்துடன் செந்தூரப்பூவே படத்தில் நடித்தது பெரிய அனுபவமாக இருந்தது. அதே நேரத்தில், ஷாட் ரெடியாகி விட்டால் நான்தான் கேப்டனை நேரில் சென்று அழைப்பேன். மற்றவர்கள் அவரிடம் சென்று அழைக்க பயப்படுவார்கள். நான் சென்றால், கேப்டன் என்னிடம் நட்பாக பேசி நடிக்க ஷாட்டுக்கு வந்துவிடுவார்.
இணைந்த கைகள் படத்தில் ஒரு காட்சியில், உயரமான பாறைகளுக்கு நடுவில் கயிற்றில் தொங்கும் பாலம் அறுந்து விடும். அப்போது நான் கீழே விழுவது போன்ற காட்சியில், அருண்பாண்டியன் வந்து என்னை காப்பாற்றுவார். அவர் டூப் போடாமல் நடித்ததால், நானும் சவாலுக்கு டூப் போடாமல் அந்த ஆபத்தான காட்சியில் நடித்தேன். கடைசியில், அந்த ஆற்றுக்குள் நிறைய முதலைகள் இருப்பது தெரிய வந்தது. நான் தவறி ஆற்றுக்குள் விழுந்திருந்தால் முதலை வாயில் சிக்கியிருப்பேன் என்று கூறியிருக்கிறார்.





