நடிகர் தனுஷ் இப்போது நடிகராக மட்டுமின்றி தமிழ் சினிமாவில் பெரிய இயக்குனராகவும் மாறி இருக்கிறார். அவர் இயக்கிய ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படம் உருவாகி வருகிறது. மேலும் பிற இயக்குனர்களின் படங்களிலும் நடிகர் தனுஷ் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்தியில் தேரோ இஸ்க் மெயின் என்ற படத்தில் நடித்துள்ள நடிகர் தனுஷ், தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வருகிற 20ம் தேதி தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இந்த படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரர் கேரக்டரில் நடித்திருக்கிறார். பிச்சைக்காரனாக இருக்கும் கதாநாயகன் திடீரென குபேரனாக மாறுவதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மேலும் முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நடித்துள்ளார்.
முதலில் குபேரா படம் 3 மணி நேரம் 15 நிமிடமாக இருந்தது. படத்தின் நீளம் அதிகம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது படத்தின் நீளம் 3 மணி நேரம் 1 நிமிடமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது 14 நிமிட காட்சிகள் குபேரா படத்தில் இருந்து நீக்கப்பட்டதால் தியேட்டர் உரிமையாளர்களும் ரசிகர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.
சமீபத்தில் குபேரா படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தனுஷ் பேசியதாவது, தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது வீடியோ காலில் வந்து இந்த குபேரா படத்தின் கதையை சேகர் கம்முலா என்னிடம் சொன்னார். அப்போது இந்த கதை எனக்கு பிடித்திருந்தால், கண்டிப்பாக நாம் சேர்ந்து பண்ணுவோம் என்று கூறியிருந்தேன். அதன் பிறகு 2ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் என்னை தொடர்பு கொண்டார். அப்போது கேட்ட போதும் படத்தின் கதை ஸ்கிரிப்ட் எல்லாமே ரொம்ப சிறப்பாக இருந்தது.
பெரிய டைரக்டர் என்று நினைத்துதான் குபேரா படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன். ஆனால் அவரை நம்பிப் போன என்னை, முதல் நாளே திருப்பதி அடிவாரத்தில் உச்சி வெயிலில் நடுரோட்டில் உட்கார வைத்து அம்மா தாயே என்று என்னை பிச்சை எடுக்க வைத்து விட்டார். ஆனால் அப்படி உச்சி வெயிலில் நடுரோட்டில் அமர்ந்து காசு கேட்டு கையை நீட்டி பிச்சை எடுத்த போதுதான், நாம் ஓடிக்கொண்டிருக்கும் ஓட்டம் எத்தனை அர்த்தமில்லாதது என்பதை நான் புரிந்து கொண்டேன் என்று நடிகர் தனுஷ் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





