தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் தயாரிப்பாளராக இருந்தவர் ராஜ்கிரண். அதன்பிறகு இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் நாயகியாக மீனா நடித்திருந்தார். மாயாண்டி சோலையம்மா என்ற கேரக்டர்களில் அவர்கள் நடிப்பு படத்தை மாஸ் ஹிட் படமாக்கியது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.
குறிப்பாக இசைஞானி இளையராஜா இசையில் இந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. இந்த படத்தில்தான் நடிகர் வடிவேலு அறிமுகமானார். அறிமுக நடிகையாக மீனாவுக்கும் இந்த படம் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்த ராஜ்கிரண் இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் நடித்த படம் காவலன். இந்த படத்தில் அசின் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை மலையாள பட இயக்குனர் சித்திக் டைரக்ட் செய்திருந்தார். இவர்தான் விஜய் சூர்யா இணைந்து நடித்த பிரண்ட்ஸ் படத்தின் இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. காவலன் படத்தில் ராஜ்கிரணின் குடும்ப பாதுகாவலர் கேரக்டரில் விஜய் நடித்திருந்தார்.
மலையாளத்தில் பாடி கார்டு என்ற படத்தை சித்திக் டைரக்ட் செய்திருந்தார். அந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் காவலன் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரோஜா மித்ரா குரியன் வடிவேலு எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். 2011ம் ஆண்டில் வெளியான இந்த படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்து இருந்தார்.
சமீபத்தில் காவலன் படம் குறித்து ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ராஜ்கிரண் கூறியதாவது, இந்த படத்தில் கடைசி காட்சியில் நடிகர் விஜயை நான் அடிப்பது போன்ற ஒரு காட்சியில் இயக்குனர் சித்திக் என்னை நடிக்க சொன்னார். கதைப்படி விஜய் நல்லவர் என்று ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் படத்தின் கதைப்படி எனக்கு தெரியாததால் விஜயை அடிப்பது போல் இயக்குனர் காட்சியை அமைத்திருந்தார்.
ஆனால் என்னுடைய கோணத்தில் விஜயை நான் அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. இது விஜய் ரசிகர்களுக்கும் பிடிக்காது. அதனால் அந்த காட்சியில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டு கேரவனுக்கு சென்றுவிட்டேன். அதற்கு பின், இயக்குனர் சித்திக் விஜயிடம் போய், இந்த காட்சியில் ராஜ்கிரண் நடிக்க மறுக்கிறார் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு பின், செட்டில் இருந்த போது விஜயே என்னிடம் பேசி, டைரக்டர் என்னை நீங்க அடிக்கணும் என்று ரொம்ப ஆசைப்படறார். என்னை அப்படி ஒரு தட்டு தட்டிடுடுங்க அவ்வளவுதானே என்று பேசி என்னை சம்மதிக்க வைத்தார், என்று நடிகர் ராஜ்கிரண் கூறியிருக்கிறார்.





