நடிகர் நாகேஷ் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷ நடிகர்களில் ஒருவர். காமெடி குணச்சித்திரம் என எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அதில் தனது முத்திரை நடிப்பை வெளிப்படுத்துவார். எம்ஜிஆர் சிவாஜி முதல் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் வரை 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். நடிப்பில் சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக நடிகர் கமல் கொண்டாடுவது நடிகர் நாகேஷை தான்.
தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படமாக இன்றும் ரசிகர்கள் விரும்பும் ஒரு படமாக இருப்பது திருவிளையாடல். இந்த பேரை சொன்னாலே அடுத்த விநாடி சிவன் வேடத்தில் சிவாஜி கணேசன், தருமி கேரக்டரில் நாகேஷ் உருவம்தான் பலருக்கும் நினைவில் வரும். அந்தளவுக்கு தருமி கேரக்டரில் நாகேஷ் வாழ்ந்து காட்டியிருப்பார்.
அந்த காட்சியில் நடித்து முடித்த பிறகு படக்குழுவினரை சேர்ந்த இயக்குனர் உள்ளிட்ட பலரும் சிவன் வேடத்தில் நடித்த சிவாஜி கணேசனை பாராட்டியுள்ளனர். அப்போது சிவாஜி, அங்கு இருந்த நாகேஷை காட்டி இந்த காட்சியை பொருத்த வரை என்னை விட மிக அருமையாக நடித்தது நாகேஷ் தான். இந்த படம் வெளியாகும் போது தருமி கேரக்டருக்காக நாகேஷை மக்கள் கொண்டாடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.
அதே போல் திருவிளையாடல் படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற பிறகு தருமி கேரக்டரில் நடித்த நாகேஷை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள். அவரது தனித்துவமான உடல் மொழியும் நடிப்பும் வசன உச்சரிப்பும் வேற லெவலில் இருந்தது. தருமி கேரக்டர் இன்று வரை ரசிகர்களால் விரும்பி ரசிக்கப்படுகிறது. இதுகுறித்து ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பில் நாகேஷிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது நடிகர் நாகேஷ் தருமி கேரக்டரில் நடித்தது குறித்து கூறியதாவது, நான் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு செல்வது வழக்கம். அப்போது பிரகாரத்தில் அங்கு ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை அடிக்கடி பார்ப்பேன். அவர் தனக்குத்தானே பேசிக்கொள்வார். புலம்புவார். தனக்குத்தானே ஏதாவது பண்ணிட்டு இருப்பார்.
அதை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன். அவருடைய உடல் மொழியை நான் அப்படியே எடுத்துக்கிட்டேன். அதை அப்படியே இந்த படத்தில் நான் பண்ணினேன். அதுதான் பெரிய ஹிட் ஆகி விட்டது. என்னுடைய ரோல் மாடல் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர்தான் என்று நடிகர் நாகேஷ் கூறியிருக்கிறார். ஒரு கலைஞன் தனக்கான தொழில் திறமையை யாரிடம் இருந்தும் கற்றுக்கொள்ள முடியும் என்பதை இந்த தருமி கேரக்டரில் வெளிப்படுத்தி ரசிகர்களை நாகேஷ் நடிகராக அசத்தியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.





