தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர்வி உதயகுமார். அவர் இயக்கிய படங்களில் சின்னக்கவுண்டர் மிகப்பெரிய வெற்றிப் படமாகும். விஜயகாந்த் சுகன்யா மனோரமா கவுண்டமணி செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமாகும். இப்போது ஆர்வி உதயகுமார் நடிகராக இருக்கிறார். பல படங்களில் நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் நடிகர் ஆர்வி உதயகுமார் கூறியதாவது, பொள்ளாச்சியில் விஜயகாந்த் நடித்த படத்தின் ஷூட்டிங் நடந்துட்டு இருந்தது. அப்போ என்னை பார்க்க கோயம்புத்தூர்ல இருந்து ஒரு நண்பர் வந்தார். அவர் தலை எல்லாம் நரைச்சுப் போய் பார்க்க ரொம்ப வயசானவர் மாதிரி தெரிவார். ஆனா நானும் அவரும் எஸ்எஸ்எல்சி ஒண்ணா படிச்சவங்கதான்.
அவர் எனக்கு முன்னாலயே படிச்சு நாலைஞ்சு வருஷம் பெயிலாகி பெயிலாகி என்கூட ஒண்ணா படிச்சவர். ஆனா என்னை விட அவருக்குதான் வயது ஜாஸ்தி. என்னை பார்க்க வந்த என் நண்பருடன், நீங்க டைரக்டரோட பிரண்டா? அப்படீன்னு விஜயகாந்த் அவர் தோள்ல கை போட்டு பேச ஆரம்பிச்சிட்டார்.
என் பிரண்ட்ஸ் என்றால் அவர் தாராளமாக பேசி பழகுவார். அப்போ ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சவங்க என்று என்னோட பிரண்ட் விஜயகாந்த் கிட்ட சகஜமாக சொல்லி இருக்கிறார். அதனால் அவரோட வயசும் என்னோட வயசும் ஒண்ணுதான்னு நினைச்சுக்கிட்டு விஜயகாந்த் என்னை நக்கல் பண்ண ஆரம்பிச்சிட்டார்.
அண்ணே இங்க வாங்கண்ணே ஷாட் ரெடியாண்ணே சீக்கிரம் ஆரம்பிங்கண்ணே என பயங்கரமா என்னை கிண்டல் பண்றார். விஜி இப்படி எல்லாம் பேச மாட்டாரேன்னு எனக்கு குழப்பமா இருந்துச்சு. அப்புறம்தான் விஷயம் தெரிஞ்சது. அப்போ எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலே. சாயந்திரம் ஆயிடுச்சு. எடுக்க வேண்டிய 2 ஷாட் மட்டும்தான் பாக்கி இருக்குது.
அப்புறம் நானும், ஏம்பா விஜி தம்பி இங்க வாப்பா, ஷாட் இருக்குது வாப்பா தம்பி, விஜி வந்து நடிப்பா.. என்று கிண்டலாக பேச ஆரம்பிச்சிட்டேன். முதலில் குழம்பிப் போன கேப்டன், அப்புறம் நானும் பதிலுக்கு கலாய்க்கறேன்னு புரிஞ்சுக்கிட்டார். அப்புறம் அவர் என்னை துரத்த நான் ஓட ஒரே காமெடியாக சந்தோஷமாக இருந்தது என்று இயக்குனர் ஆர்வி உதயகுமார் கூறியிருக்கிறார்.





