தமிழ் சினிமாவின் பிற மாநில நடிகர்களுக்கு ரசிகர் பட்டாளம் இருப்பது என்பது மிக மிகக் குறைவுதான். நடிகர் விஜய்க்கு கேரளாவில் ரசிகர் பட்டாளமும், சூர்யாவுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெரும் கூட்டமும் இருக்கிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ரசிகர் மன்றம் என்ற அளவுக்கு இல்லாமல் இணையத்தில் பேசப்படும் பெரும் நட்சத்திரமாக விளங்குகிறார் பகத் பாசில்.
மலையாளத்தில் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் அவர், தமிழ் சினிமாவிலும் அவ்வப்போது தலை காட்டி வருகிறார். வேலைக்காரன் திரைப்படம் தான் அவருக்கு இதில் முதல் படமாக அமைந்தது. சிவகார்த்திகேயன் நடித்திருந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
தொடர்ந்து பகத் பாசிலுக்கு பெரும் ரசிகர்களை திரட்டிய திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தின் முதல் பாதியை, பகத் பாஸில் தான் நகர்த்தி சென்று இருப்பார். அதில் அவரது கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருந்ததாக பலரும் கூறினர்.
தொடர்ந்து மாமன்னன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார் பகத் பாஸில். அந்த படம் வெளியாவதற்கு முன்பு பலரும் வடிவேலு கதாபாத்திரத்தைதான் எதிர்நோக்கி காத்திருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் காமெடியை உதறிவிட்டு கனமான கதாபாத்திரத்தில் நடிப்பதாலும், அரசியல்வாதி ரோல் என்பதாலும் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் அதை எல்லாம் ஓரங்கட்டி விட்டு ஒன் மேன் ஆர்மியாக பெர்ஃபார்மன்ஸ் காட்டினார் பகத் பாசில். ரத்தினவேல் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், தனது வேலையை சரியாக செய்து முடிக்க, பலரும் பாராட்டினார்கள். இப்படியான சூழலில் தற்போது மீண்டும் பகத் பாசில் மற்றும் வடிவேலு ஜோடி இணைந்து இருக்கிறது. மாரீசன் என தலைப்பு இடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை, சுதீஷ் சங்கர் என்பவர் இயக்கியிருக்கிறார்.
இந்த திரைப்படம் குறித்து பேசி இருக்கும் அவர், படத்தில் வடிவேலுவிடம் ஒரு பெரும் பணம் இருப்பதை பகத் பாஸில் அறிகிறார். அதனை அபகரிக்கவும் திட்டமிடுகிறார். வடிவேலு திருவண்ணாமலைக்கு செல்ல, ஃபகத் பாஸில் அவரை இருசக்கர வாகனத்தில் விடுவதாக கூறி நாகர்கோவிலில் இருந்து அழைத்துச் செல்கிறார். இதனைத் தொடர்ந்து நடக்கும் கதைதான் மாரீசன் என்றும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.





