நடிகர்கள் எம்ஜிஆர் சிவாஜி கணேசனை போலவே தமிழ் சினிமாவில் கடும் போட்டியாளர்களாக கருதப்பட்டவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். ஆனால் ஆரம்பகாலத்தில் இருந்த ரஜினியும் கமலும் நெருக்கமான நண்பர்கள். அந்த நட்பு இன்றுவரை தொடர்கிறது. இதுவரை எந்த ஒரு இடத்திலும் கமலை விட்டுக்கொடுத்து ரஜினியோ, ரஜினியை விட்டுக்கொடுத்தோ கமலும் பேசியதே இல்லை.
சமீபத்தில் கூட வேள்பாரி நூல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை வெற்றி விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்த விழாவுக்கு நடிகர் கமல்ஹாசனை அழைத்திருக்கலாம். அவர் எவ்வளவு பெரிய அறிவாளி. படிப்பாளி அவரை அழைக்காமல் 75 வயதில் கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு ஸ்லோ மோஷனில் நடக்கும் என்னை அழைத்து விட்டீர்களே என்று பலரும் பேசுவார்கள் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழக மக்கள் பெரும்பாலானோர் விரும்பிய நிலையில் கடைசியில் திடீரென யாரும் எதிர்பார்க்காமல் அரசியல் கட்சி ஆரம்பித்தவர் நடிகர் கமலஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் ரீதியாக ரஜினிக்கும் கமலுக்கும் மாற்றுக் கருத்து இருந்தாலும் இன்றுவரை அவர்கள் இருவரும் நெருக்கமான நண்பர்களாகவே இருந்து வருகிறார்கள்.
மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்தில் தனியாக நின்று போராடினார். ஆனால் மக்கள் மத்தியில் போதிய ஆதரவு கமலுக்கு கிடைக்காத நிலையில் சட்டசபை தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் என எந்த தேர்தலிலும் அவரது கட்சிக்கும் அவருக்கும் முக்கியத்துவமே கிடைக்கவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் 2021ல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு கமல்ஹாசன் தோல்வியடைந்தார். அதன்பிறகு இப்போது கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இருந்து வருகிறார்.
கடந்த ஆண்டு நடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது திமுகவுக்கு ஆதரவாக கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தை அடிப்படையில், ராஜ்யசபா எம்பி சீட் ஒன்று திமுக சார்பில் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அடுத்த வாரம் 25ம் தேதி அவர் எம்பியாக பதவியேற்க உள்ள நிலையில், தனது நீண்டகால நண்பர் ரஜினிகாந்தை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்தார்.தனது சான்றிதழை வழங்கி ரஜினியிடம் நேரில் வாழ்த்து பெற்றுள்ளார்.
புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்துடன் பகிர்ந்தேன்; மகிழ்ந்தேன் என்று நடிகர் கமல்ஹாசன் இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகர்களாக இருந்து வரும் நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் இடையே நீடித்து வரும் நட்பு உன்னதமான நிலையில் இப்போதும் தொடர்வது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை வாழ்த்துகளை பெற்று வருகிறது.





