நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து ஒரு சில நடிகர்கள் மட்டுமே வாய் திறந்து தங்களது கருத்துகளை கூறியிருக்கின்றனர். ஆனால் பெரும்பாலான நடிகர்கள் விஜயின் அரசியல் வருகை குறித்து பாராட்டுகளோ வாழ்த்துகளோ அல்லது தங்களது கருத்துகளையோ தெரிவிக்கவில்லை. நடிகர்கள் ராதாரவி ஷ்யாம் பார்த்திபன் போன்ற ஒரு சிலர் மட்டுமே விஜயை பாராட்டி வருகின்றனர்.
ஏனெனில் நடிகர் விஜய் இப்போது அரசியல் களத்தில் நிற்பது திமுகவை எதிர்த்துதான். அதனால் பகிரங்கமாக விஜய்க்கு ஆதரவாக பேச பலரும் மறுக்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உதயநிதி ஸ்டாலினை யாரும் பகைத்துக்கொள்ள விரும்பாததே இதற்கு காரணம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் திமுகவின் ஆதரவாளராக மாறிவிட்டார். ரஜினி எப்போதுமே பாஜகவின் ஆதரவாளராக தான் இருந்து வருகிறார். தேமுதிக கட்சி விஜயகாந்த் மறைவுக்கு பின் பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. சீமானும் விஜயுடன் கூட்டணி இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டார். திமுகவுடன் இணையும் கூட்டணி கட்சிகளை விஜய் ஏற்க மாட்டார். பாஜகவுடன் இணைந்த அதிமுகவுடனும் சேர மாட்டார் என்ற நிலையில் விஜய் அரசியலில் இருந்து வருகிறார்.
இதற்கிடையே நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, கல்யாணசுந்தரம் என்ற நான் நடிக்க வேண்டிய படம் போட்டோ செஷனோடு முடிந்தது. அத்துடன் கைவிடப்பட்ட படம். ஆனால் பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்த செலவில் நான் திருமணம் செய்து வைத்தேன்.
தாலி முதல் மெட்டி வரை தட்டுமுட்டு சாமான்களும் சீர்செய்து சினிமா பூஜைகளை இப்படி பிரயோஜனமாகவும் செய்யலாம் என அப்படி ஒரு நிகழ்ச்சியை நான் தொடங்கி வைத்தேன். பின்னாளில் அதுவே பலராலும் பின் தொடரப்பட்டது. அது எனக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.
பின்னொரு காலத்தில் நடிகர் விஜய், என்னுடைய தலைமையில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதன்மூலம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் விஜய்தான், மணமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமென அப்போது நான் பாராட்டி பேசினேன். அப்படிப்பட்ட நல்ல காரியங்கள் எல்லாம் சேர்ந்துதான் அவருக்கு கட்சி துவங்கும் தைரியம் வந்தது என்று நடிகர் பார்த்திபன் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.





