தர்மன் சூதாட்டத்தில் தோற்றதால்தான் மகாபாரதமே உருவானது என்று சொல்வார்கள். மது மாது ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக சூது மிக மோசமான ஒரு விஷயமாக மனிதர்களின் நல்வாழ்வை கெடுக்கும் அபாயம் மிக்கதாக அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது. மது மாது போதையை காட்டிலும் சூதாட்டம் என்கிற போதை மனிதர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விடும் என்று அனுபவப்பட்ட பலரும் அழுது புலம்பியிருக்கின்றனர்.
ஆனால் டிஜிட்டல் யுகமாக மாறிய இன்றைய காலகட்டத்தில் செல்போன்களில் சூதாட்டம் பெருகி விட்டது. அதை ஊக்குவிக்கும் விளம்பரங்களிலும் நட்சத்திர நடிகர்கள் நடித்து மக்களின் ஆசையை தூண்டி விடுகின்றனர். ஆரம்பத்தில் இந்த சூதாட்ட செயலியில் விளையாட்டாக ஆட ஆரம்பித்து நாளடைவில் அதிலேயே முழுகிப் போய் பல ஆயிரம் பல லட்சம் என கடனாளியாக பலரும் மாறி விடுகின்றனர். இறுதியில் உயிரையே மாய்த்துக் கொள்கின்றனர்.
இப்படி சட்ட விரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ் விஜய் தேவரகொண்டா ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர்களை நேரில் ஆஜராக சொல்லி இன்று சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் சூதாட்ட செயலியால் பணத்தை இழந்து பலரும் சிக்கலில் தவிர்த்து வருகின்றனர். ஒரு சிலர் அதிக கடன் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதனால் சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் தருவதையும் ஊக்கப்படுத்துவதையும் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சட்ட விரோத சூதாட்ட செயலிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. ஆன்லைன் மூலம் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சட்ட விரோதமாக சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் பிரகாஷ்ராஜ் விஜய் தேவரகொண்டா ரெட்டி ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. தற்போது இவர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை அவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
அதன்படி வருகிற ஜூலை 30ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு நடிகர் பிரகாஷ்ராஜூக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு நடிகருக்கும் வெவ்வேறு தேதியை குறிப்பிட்டு அமலாக்கத்துறை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது. கோடிக்கணக்கில் படங்களில் நடித்து சம்பாதிக்கும் முன்னணி நட்சத்திர நடிகர்கள், சில கோடி ரூபாய் சம்பளத்தில் இதுபோன்ற சட்டவிரோத செயலிகளுக்கு ஆதரவாக விளம்பரம் நடித்துவிட்டு போய் விடுகின்றனர். அவர்களை நம்பி போகும் அப்பாவி மக்கள் கடைசியில் பல லட்சம் ரூபாய் கடனாளியாக மாறி தவிக்கின்றனர் என்பதுதான் நிதர்சனம்.





