தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகவேள் எம்ஆர் ராதா. கடந்த 1960 70களில் அவர் பல படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக அப்போது தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஆகியோரது பல படங்களில் எம்ஆர் ராதா லீடிங் ரோல்களில் நடித்திருக்கிறார்.
எம்ஆர் ராதாவின் வாரிசுகளாக இப்போதும் தமிழ் சினிமாவில் நடிகர்கள் ராதா ராதாரவி ராதிகா சரத்குமார் நிரோஷா ராம்கி ஆகியோர் இருந்து வருகின்றனர். எம்ஆர் ராதாவின் மற்றொரு மகன் நடிகர் எம்ஆர் ஆர் வாசுவின் மகன்தான் நடிகர் வாசுவிக்ரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எப்போதுமே வித்யாசமான கோணத்தில் சிந்திக்கும் பகுத்தறிவாளராக எம்ஆர் ராதா இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் கூறியதாவது, இன்கம்டாக்ஸ் ரெய்டு என்றாலே எல்லோரும் இப்போது பயந்து விடுகிறோம். ஒருமுறை நடிகவேள் எம்ஆர் ராதா வீட்டுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் அஞ்சு ஆறு பேர் நுழைந்து விட்டனர். யார் நீங்க என்று எம்ஆர் ராதா அவர்களிடம் கேட்ட போது, நாங்க இன்கம்டாக்ஸ் ஆபிசர்ஸ், ரெய்டு பண்ண வந்திருக்கோம், என்று கூறியிருக்கின்றனர்.
உடனே வீட்டுக்குள் இருந்து ரோட்டுக்கு ஓடி வந்த எம்ஆர் ராதா, அய்யய்யோ அய்யய்யோ என்று அலறி சத்தம் போட்டிருக்கிறார். இதைப் பார்த்து அங்கிருந்த மக்கள், என்ன எம்ஆர் ராதா ரோட்டில் வந்து இப்படி சத்தம் போடுகிறார் என்று அவரது வீட்டுக்கு முன்பாக திரண்டு விட்டனர். அப்போது அவர்களிடம், என் வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து விட்டனர், கத்தியை காட்டி என்னை மிரட்டுகின்றனர். நீங்க எல்லாம் தான் என்னை காப்பாத்தணும் என்று அலறியிருக்கிறார்.
நம்ம எம்ஆர் ராதா வீட்டுக்குள்ள திருடன்கள் புகுந்து அவரையே மிரட்டுகிறார்களா, அவர்களை சும்மா விடலாமா என்று ஒரு கூட்டம் எம்ஆர் ராதா வீட்டுக்குள் சென்று அங்கு இருந்த வருமான வரித்துறை அதிகாரிகளை அடிக்க துவங்கி விட்டனர். அந்த நேரத்தில் வீட்டுக்குள் இருந்த முக்கியமானதை எல்லாம் பெட்டிகளில் எடுத்து போட்டுக்கொண்டு எம்ஆர் ராதா, காரில் பாதுகாப்பாக எடுத்து சென்றுவிட்டார்.
அந்த சம்பவத்துக்கு பிறகுதான் வருமானவரித்துறை அதிகாரிகள் எங்கு ரெய்டுக்கு சென்றாலும் போலீஸ் இல்லாமல் செல்வதில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள் என்று அந்த விழாவில் நடிகர் கே பாக்யராஜ் எம்ஆர் ராதா வாழ்க்கையில் நடந்த சம்பவம் குறித்து பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





