மத்திய அரசு 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2023ம் ஆண்டுக்கான இந்த தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த தமிழ் திரைப்படம் தேசிய விருதை பார்க்கிங் படம் பெற்றுள்ளது. அதேபோல் இந்த படத்தில் நடித்த நடிகர் எம்எஸ் பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் விருதும்இந்த படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் வெளியான பார்க்கிங் படத்தை இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. நடிகர்கள் ஹரீஷ் கல்யாண் எம்எஸ் பாஸ்கர் இந்துஜா ராமா ராஜேந்திரா இளவரசு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இரண்டு வீடுகள் உள்ள ஒரு காம்பவுண்டில் 2 குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் பார்க்கிங் பகுதியில் 2 பேரில் யார் காரை நிறுத்திக் கொள்வது என்பதில் 2 பேருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை தான் இந்த படத்தின் கதை. பார்க்கிங் போன்ற சாதாரண பிரச்னைகள்தான் மனித மனங்களின் ஆழத்தில் இருக்கும் அகம்பாவத்தையும் கோபத்தையும் வெறுப்பையும் தோண்டி எடுத்து விஸ்வரூபமாக வெளிப்பட வைக்கிறது என்பதை இந்த படத்தில் மிகச் சிறப்பாக அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறியிருந்தார்.
இந்த படம் வெகுஜனங்களை மிகவும் கவர்ந்த நிலையில் பார்க்கிங் படத்துக்கு இப்போது 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த திரைப்படம் சிறந்த துணை நடிகர் சிறந்த திரைக்கதை என 3 விதமான தேசிய விருதுகளை இந்த படம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த படத்தில் நடிப்பில் மிரட்டிய எம்எஸ் பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் டப்பிங் கலைஞராக இருந்து பிறகு டிவி சீரியலில் பட்டாபி கேரக்டரில் நடித்து பிறகு சினிமாவில் அறிமுகமாகி சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த அவர் இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். எந்தவிதமான கேரக்டர் என்றாலும் அதில் நடிப்பில் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தும் சிறந்த கலைஞராக அவர் இருக்கிறார்.
மேலும் மத்திய அரசின் இந்த பட்டியலில், சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருது ஜீவி பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான வாத்தி படத்தில் இசையமைத்த அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக நடிகர் தனுஷ் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





