இந்திய அரசின் 71வது தேசிய விருதுகள் பெறுவோரின் தேர்வு பட்டியல் நேற்று வெளியானது. இதில் தமிழில் சிறந்த படமாக பார்க்கிங் படம், சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்திய சிறந்த துணை நடிகராக எம்எஸ் பாஸ்கரும் சிறந்த திரைக்கதையாக படமாக பார்க்கிங் என இந்த படம் 3 விருதுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் விருதுக்குரிய தகுதியான படைப்பு என்பதை யாருமே மறுக்க முடியாது.
அதே நேரத்தில் இந்த 71வது தேசிய விருதுகள் பட்டியலில் சர்ச்சைக்குரிய திரைப்படமாக இருந்த தி கேரளா ஸ்டோரி என்ற படத்துக்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டு இருப்பது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த படத்துக்கு தேசிய விருதுகளை அறிவித்ததை கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
சிறந்த இயக்குனர் சிறந்த ஒளிப்பதிவு என்ற 2 பிரிவுகளில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ள அதே வேளையில், நடிகர் பிருத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்படாததும் பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு தந்திருக்கிறது.
ஒரு படைப்பை வெற்றி பெறச் செய்வது ரசிகர்கள்தான். அவர்கள் கைதட்டி பாராட்டி நல்ல படம் என்று மனதார கூறி விமர்சனம் செய்துவிட்டால் அதை விட பெரிய விருது எதுவும் இல்லை. ஒரு உண்மையான படைப்பாளியின் நோக்கம் ஒரு படைப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டால் மட்டுமே அது முழு வெற்றியை தருகிறது. அந்த வகையில் ஆடுஜீவிதம் சிறந்த படமாக எப்போதோ ரசிகர்களிடம் ஏராளமான விருதுகளை பெற்றுவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் அரசால் கௌரவிக்கப்பட வேண்டிய ஒரு படைப்பு புறக்கணிக்கப்படுவதும் பலத்த ஏமாற்றத்தை தருகிறது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்ட ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, தேசிய திரைப்பட விருதுகள் சிலவெனினும் பெற்ற வரைக்கும் பெருமை தான். விருதுகளை வென்ற கலைக் கண்மணிகள் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் கேஎஸ் சினிஷ், சகோரர் எம்எஸ் பாஸ்கர், தம்பி ஜீவி பிரகாஷ், நடிகை ஊர்வசி சரவண மருது சவுந்தரபாண்டியன் மீனாட்சி சோமன் ஆகிய அனைவர் மீதும் என் தூரத்து பூக்களை தூவி மகிழ்கிறேன்.
இந்த மிக்க புகழைத் தக்க வைத்துக் கொள்வதற்கு மேலும் உழைப்பதற்கு இந்த விருதுகள் ஊக்கமும் பொறுப்பும் தரும் என்று உறுதியாக நம்புகிறேன். ஆயிரம் சொல்லுங்கள் ஆடுஜீவிதம் அயோத்தி விருது பெறாதது எனக்கு ஏமாற்றம்தான் என்று கவிஞர் வைரமுத்து தனது பதிவில் பகிரங்கமாக கூறியிருக்கிறார். அயோத்தி படமும் ஆடுஜீவிதம் படமும் தேசிய விருது பெற வேண்டிய படைப்புகள் என்று கவிஞர் வைரமுத்து ஒரு நல்ல சினிமா ரசிகராக தன் ஏமாற்றத்தை இதில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.





