இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் நாகார்ஜூனா சௌபின் சாகிர் அமீர்கான் சத்யராஜ் உபேந்திரா ஸ்ருதிஹாசன் நித்யா ராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கூலி படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படம் பான் இந்தியா படமாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற படத்தின் நாயகன் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, கைதி படம் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜூக்கு போன் செய்து வாழ்த்துகளை தெரிவித்தேன். அவரை வீட்டுக்கு அழைத்து கதையும் கேட்டேன். அவரோ நான் கமல் ரசிகர் என்றார். கதையைச் சொல்லச் சொன்னால் கமல் ரசிகர் என்கிறாரே என நினைத்தேன். விக்ரம் படத்தை முடித்த பின் அவரை அனுப்பி வைப்பதாக கமல்ஹாசனே என்னிடம் சொல்லி இருந்தார். அவரை மிஸ் பண்ணக் கூடாது என்று நான் நினைத்தேன்.
முதலில் இந்த படத்துக்கு தேவா என்றுதான் டைட்டில் வைத்திருந்தோம். பின்னர் பெயர் மாறியது. கூலி படம் ஆர்கானிக் ஆக உருவானது. கூலி படத்தின் உண்மையான ஹீரோ லோகேஷ் கனகராஜ்தான். லோகேஷிடம் மற்ற படங்கள் பான் இந்தியா ஹிட் ஆகுது, இந்த படத்தை பான் இந்தியா படமாக எடுங்கள் என்று சொன்னேன். ரிலீஸ் தேதியை நீங்களே முடிவு செய்யுங்கள் என்றேன். எந்த இயக்குனராவது முதல் ஷாட்டை பிணத்துக்கு மாலை போட்டு சொல்லி எடுப்பார்களா? ஆனால் லோகேஷ் அதை செய்தார்.
இந்தியாவின் முதல் ராக் ஸ்டார் அனிருத் அவரை எவ்வளவு வேண்டுமானாலும் புகழலாம். நான் லேட்டாகச் சென்றதால் சௌபின் சாஹிர் ஆடிய டான்ஸை பார்க்க முடியவில்லை. எனக்கும் சத்யராஜூக்கும் கருத்து ரீதியான முரண்பாடு இருக்கலாம். ஆனால் அவர் தன் மனதில் பட்டதை பேசி விடுவார். மனதில் பட்டதை பேசுபவர்களை நம்பலாம். ஆனால் உள்ளே வைத்துக் கொண்டிருப்பவர்களை நம்ப முடியாது. வில்லனாக இந்த படத்தில் நாகார்ஜூனா வருகிறார்.
வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் அஜீத்குமார் பேசும் ஒரு வசனம், நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாக நடிக்கிறது என்ற அந்த வசனம் போல நாகார்ஜூனாவும் எத்தனை காலம்தான் நல்லவனாக இருப்பது என்று வில்லனாக மாறிவிட்டார். கமல்ஹாசனே வியக்கும் அளவுக்கு அவர் இந்த படத்தில் நடித்துள்ளார். என் வெற்றிக்கான ரகசியம் உழைப்பு மட்டுமல்ல, ஆண்டவன் குரல். எவ்வளவு பணம் புகழ் இருந்தாலும் வீட்டில் நிம்மதி வெளியே கௌரவம் இல்லாவிட்டால் எதுவுமே இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவில் பேசியிருக்கிறார்.





