கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2022ம் ஆண்டில் வெளியான கன்னட திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த ரிஷப் ஷெட்டி அந்த படத்தை அவரே டைரக்டும் செய்திருந்தார். முதலில் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற காந்தாரா படம் பிறகு தமிழ் தெலுங்கு இந்தி என பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு ஆதரவை பெற்ற காந்தாரா படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலைக் குவித்தது. காந்தாரா படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு ரிஷப் ஷெட்டி மீண்டும் காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படம் கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று உலகம் முழுவதும் வெளியானது.
தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் என பல்வேறு மொழிகளில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகியுள்ள இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாகவும் ருக்மணி வசந்த் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களிலும் நடித்திருக்கின்றனர். படம் ரிலீஸான 6 நாட்களில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியுள்ளது,
ஆனால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 130 கோடி ரூபாய்தான் என்று சொல்லப்படுகிறது. இன்னும் 10 தினங்களில் காந்தாரா படம் எப்படியும் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்து விடும் என்று பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் காந்தாரா சாப்டர் 1 படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்குள் ரசிகர்கள் சிலர் ஆர்வமாக இந்த படத்தில் வரும் காந்தாரா உள்ளிட்ட சில தெய்வ கதாபாத்திரங்கள் போல் வேடமிட்டு ரசிகர்களின் முன்னிலையில் நடனமாடி வருகின்றனர்.
இதுபோன்ற வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதுகுறித்து படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, காத்தாரா கதாப்பாத்திரத்தை பொதுவெளியில் அவமதிக்க வேண்டாம். துலு நாடான கர்நாடகாவின் பெருமை கடவுளின் புனிதத் தன்மை எப்போதும் காக்கப்பட வேண்டும்.
தெய்வ வழிபாடு என்பது ஒரு ஆழமான ஆன்மீக மரபு. காந்தாரா படம் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்படவில்லை. இதுபோன்ற அவமதிக்கும் செயல்கள் எங்கள் மத நம்பிக்கையை துளு சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துகின்றன. எனவே இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





