ஏழை மாணவ மாணவியர் கல்வி நலனில் அக்கறை கொண்டுள்ள நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் என்ற கல்வி சேவை அமைப்பை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த அகரம் பவுண்டேசன் கல்வி சேவை நிறுவனம் மூலமாக பல ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் பட்டப் படிப்பை முடித்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமின்றி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களையும் கண்டறிந்து அகரம் பவுண்டேஷன் அமைப்பு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. மலை கிராமங்களில் வாழும் மாணவர்கள் பெற்றோர் இல்லாத மாணவர்கள் படிக்க வசதி இல்லாத மாணவர்கள் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்களை கண்டறிந்து அகரம் பவுண்டேஷன் சார்பில் கல்வி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அகரம் பவுண்டேஷன் நிறுவனத்தின் 20வது ஆண்டு துவக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர்கள் சூர்யா கார்த்தி சிவக்குமார் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது, கல்வியே ஆயுதம். இதுதான் அகரத்தின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை நனவாகி இருக்கிறது. கல்வி என்பது படிப்பு மட்டுமில்லாமல் பண்பைச் சொல்லிக் கொடுப்பதும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதும் தான்.
அதனை இன்று மாணவ மாணவிகள் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த சந்தோசத்தை பகிரும் நாள் இன்று. முதல் தலைமுறையை சேர்ந்த கிட்டத்தட்ட 6700 மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து பட்டதாரியாக மாறி இருக்கிறார்கள். கல்லூரியில் சேர்ந்து நல்ல மதிப்பெண் பெற்று வேலைக்கு சென்று நிறைய சம்பாதிக்கிறார்கள். அவர்களின் தலைமுறையில் யாரும் பார்க்காத வளர்ச்சி, அந்த மாணவி மூலமாகவும் மாணவர் மூலமாகவும் அந்த குடும்பங்களுக்கு கிடைத்திருக்கிறது.
இது பெரிய சந்தோஷம். ஆனால் இது பெருமை அளிக்கிறதா என்றால் அது எனக்கு தெரியவில்லை. ஆனால் அகரம் மூலம் படித்த மாணவர்களும் மாணவிகளும் பல மடங்கு திரும்ப கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது அகரத்தை நடத்திக் கொண்டிருப்பது முன்னாள் மாணவர்களும் மாணவிகளும் தான். அப்படி பார்த்தால் இந்த சமுதாயத்தில் அவர்களைப் போல கஷ்டப்படும் மாணவர்களுக்கு மாணவிகளுக்கும் உதவி செய்வதற்காக களம் இறங்கி இருக்கிறார்கள்.
அதனை நினைத்து ஒவ்வொருவரும் பெருமை கொள்கிறோம். அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் நாள்தான் இது. ஒவ்வொரு மாணவியும் மாணவரும் கல்வி மூலம் என்னென்ன மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது என்று பகிர்ந்து கொள்கிறார்கள். கல்வி மூலம் கிடைக்கும் நம்பிக்கையை கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நடிகர் பேசியிருக்கிறார்.





